Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிப்பாளர் க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (14:56 IST)
தமிழ்நாட்டின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவரான 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

சென்னை லயோலா கல்லூரியில் படித்த அவர் ஆரம்பத்தில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். பிறகு, தமிழில் தரமான தயாரிப்பில் - தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் - புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1974ஆம் ஆண்டில் நண்பர்களோடு இணைந்து 'க்ரியா' பதிப்பகத்தைத் துவங்கினார்.

சுந்தரராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்', அம்பை எழுதிய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', இமயத்தின் 'கோவேறு கழுதைகள்', பூமணியின் 'அஞ்ஞாடி', ந. முத்துச்சாமியின் 'மேற்கத்திக் கொம்பு மாடுகள்' உள்ளிட்ட மிகச் சிறந்த புனைவுகளையும் ஆல்ஃபர் காம்யுவின் 'அந்நியன்', காஃப்காவின் 'விசாரணை', எக்ஸ்பரியின் 'குட்டி இளவரசன்' போன்ற மொழிபெயர்ப்புகளையும் இவரது மேற்பார்வையின் கீழ் க்ரியா வெளியிட்டது.

ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூலான Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. புத்தகத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது இவருடைய சாதனைகளில் ஒன்று.

க்ரியாவின் தற்கால தமிழகராதி, எஸ். ராமகிருஷ்ணனின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று.

தற்கால பொது எழுத்துத் தமிழில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருள் அளிக்கும் நோக்கில் க்ரியா அகராதி திட்டம் உருவாக்கப்பட்டது.

1985ல் இந்த அகராதிக்கான பணிகள் துவங்கப்பட்டு, 1992ல் முதல் பதிப்பு வெளிவந்தது. 12 முறை மறு அச்சாக்கம் செய்யப்பட்ட பிறகு, விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2008ல் வெளியானது. அந்த அகராதியின் மேலும் விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு எஸ். ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது.

சென்னையிலுள்ள ஆய்வு நூலகமான ரோஜா முத்தையா ஆய்வு நூலக உருவாக்கத்திலும் எஸ். ராமகிருஷ்ணன் பங்குவகித்தார். கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரின் நூல் சேகரிப்புகளை வாங்கிக்கொண்ட சிகாகோ பல்கலைக்கழகம், அதனை சென்னையில் வைத்து பராமரிக்க சரியான நபர்களைத் தேடிக்கொண்டிருந்தது.

"அந்தத் தருணத்தில் எஸ். ராமகிருஷ்ணன், சங்கரலிங்கம், நாராயணன், தியோடர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து மொழி அறக்கட்டளையை நடத்திக்கொண்டிருந்தனர். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஏ.கே. ராமானுஜன், இவர்களை அணுகும்படி சிகாகோ பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைத்தார். அதனைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ரோஜா முத்தையா நூலகத்தின் முதல் தலைவராக சங்கரலிங்கம் பொறுப்பேற்றார். இப்படியாக இந்நூலகத்தின் ஆரம்ப கட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முக்கியப் பங்கிருந்தது" என்கிறார் அந்நூலகத்தின் தற்போதைய இயக்குநரான சுந்தர் கணேசன்.

அதை ஆமோதிக்கிறார் ஆய்வாளரும் எழுத்தாளரும் எஸ். ராமகிருஷ்ணனுடன் மொழி அறக்கட்டளையில் செயல்பட்டவருமான தியோடர் பாஸ்கரன். "1989ல் மொழி அறக்கட்டளையை ஆரம்பித்தோம். பதிப்புத் துறையில் தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவர வேண்டுமென நினைத்தார்.

ஆகவே, தமிழ்மொழிக்கு புதிய சாதனங்களை அளிக்கும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. எல்லோருமே க்ரியா அகராதி குறித்துத்தான் பேசுகிறார்கள். ஆனால், மொழி அறக்கட்டளையில் சார்பில் அவரை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு, வெளிவந்த தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியும் மிக முக்கியமான ஒரு பணி" என்கிறார் தியோடர் பாஸ்கரன்.

அவர் தமிழ் பதிப்புலகின் மிகச் சிறந்த எடிட்டர். புத்தக ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டு அவர் பிரதிகளைச் செம்மையாக்கம் செய்வது ஒரு பெரிய துன்புறுத்தலைப் போலத் தோன்றும். ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் அது சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று விவாதிப்பார் என நினைவுகூர்கிறார் தியோடர் பாஸ்கரன்.

ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் நேரடியாக பல படைப்புகளை க்ரியா கொண்டு வந்திருக்கிறது. "ஒரு மொழிபெயர்ப்பு வரும்போது அதில் துல்லியமும் செம்மையும் காக்கப்பட வேண்டுமென்பதில் அவரைப்போல கவனமாக இருந்தவர்கள் யாரும் கிடையாது. 1980ல் ஆல்ஃபர் காம்யூவின் அன்னியன் பதிப்பிக்கப்பட்டபோது, அதன் முதல் மொழிபெயர்ப்பை ஆறு முறை செம்மை செய்தோம். அவருடனான என்னுடைய உறவு 1980ல் துவங்கி இப்போதுவரை நீடித்தது. அவருடைய மறைவு தமிழுக்கு இலக்கிய ரீதியிலும் மொழி ரீதியிலும் பெரிய இழப்பு" என்கிறார் வெ. ஸ்ரீராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments