Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வெற்றிக்கு உதவிய ராகுலின் ‘டிராவிட் ஆட்டம்’

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (23:06 IST)
இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி குறைந்த இலக்கையே எட்ட முடியாமல் திணறியது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி 370-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த இந்திய அணியும் அதை விரட்டிய இலங்கை அணியும் ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் ரன்களை எடுக்கத் தடுமாறின.
 
இலங்கை அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த ரன்களை எட்டுவதற்கு இந்திய அணிக்கு 40-க்கும் அதிகமான ஓவர்கள் தேவைப்பட்டதுடன் 6 முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருந்தது.
 
இந்திய அணியில் கேஎல் ராகுல் நிதானமாக நீடித்து நின்று ஆடிய ஆட்டமே வெற்றிக்கு உதவியது. கடைசிவரை ஆட்டமிழக்காத அவர் 103 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். 
 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அந்த அணியால் 40 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்திய அணிக்கும் இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்றிருக்கிறது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் பந்திலேயே பவுண்டரி மூலம் கணக்கைத் தொடங்கிய அந்த அணிக்கு அதன் பிறகு வேகமாக ரன் குவிக்கும் வேறெந்த முயற்சியும் பலன் தரவில்லை. ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ சிராஜ் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து அவுட் ஆனார்.
 
அதன் பிறகு குசால் மென்டிஸும், நுவனிது ஃபெர்னாண்டோவும் நிதானமாக ஆடி ரன்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். 16-ஆவது ஓவரில் இலங்கை அணிக்கான முதல் சிக்சரை மென்டிஸ் அடித்தார். அந்த ஓவரில் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எடுத்திருந்தது.
 
அடுத்த ஓவரில் 100 ரன்களை எட்டிய இலங்கைக்கு கடைசி பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. குல்தீப் யாதவின் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் குசால் மென்டிஸ் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் புதிதாக வந்த தனஞ்ஜெயா ரன்ஏதும் எடுக்காமல் முதல்பந்திலேயே ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் வீசிய பந்து நடு ஸ்டம்ப்பை தகர்த்தது.
 
மூன்று விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி அதன் பிறகு ரன்களை எடுக்கத் தடுமாறியது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்த நுவனிது ஃபெர்னாண்டோ 22-ஆவது ஓவரில் ரன் அவுட் ஆனார். 63 பந்துகளுக்கு 50 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
 
இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. 23-ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் மற்றொரு முறை ஸ்டம்பைத் தகர்த்தார். இந்த முறை ஷனகா நடுஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த அவர் இந்த முறை 2 ரன்களை மட்டுமே எடுத்தார்.
 
குல்தீப் யாதவின் பந்துவீச்சு மிரட்டல் 25-ஆவது ஓவரிலும் தொடர்ந்தது. இந்த முறை அசலாங்கா அடித்த பந்தை தானே கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார் குல்தீப். 25-ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
 
எனினும் மறுமுனையில் இருந்த ஹசரங்க டி சில்வா அதிரடியாக ஆடத் தொடங்கினார். 27-ஆவது ஓவரில் ஒரு சிக்சர், இரு பவுண்டரிகளை அவர் விளாசினார். ஆனால் அவராலும் நீடித்து நிற்க முடியவில்லை. இந்தியாவின் அதிவேகப் பந்துவீச்சாளரான உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சில் அக்சர் படேலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 21.
 
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இலங்கை அணியால் 40 ஓவர்களைக்கூட நிறைவு செய்ய முடியவில்லை. அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்த உதவிய வெல்லலகே சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 39.4 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது.
 
 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவும், முகமது சிராஜும் தலை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இலங்கை அணியின் நுவனிது 50 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்.
 
அதன் பிறகு ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே மெதுவாக ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 5-ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் கருணரத்னே பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சுப்மன் கில்லும் விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழந்ததால் இந்திய அணியின் ரன்குவிப்பு வேகம் குறைந்தது. 10-ஆவது ஓவரில் லஹிரு குமார பந்துவீச்சில் விராட் கோலி ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.
 
10 ஓவர் முடிவில் 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. 15-ஆவது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுக்கு ஆடமிழந்தார். இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் கேஎல் ராகுலும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினர். ஓவருக்கு 4 ரன்கள் வீதமே ரன்குவிப்பு வேகம் இருந்தது. அவ்வப்போது மட்டுமே எல்லைக் கோட்டைத் தாண்டி பந்து சென்றது. மற்படி ஒன்றும் இரண்டுமாகவே அவர்கள் ரன்களைச் சேகரித்தனர்.
 
நிலைத்து ஆடிக் கொண்டிருந்த ஹர்திக், 35-ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்தார். அதன் பிறகு அக்சர் படேல் களத்துக்கு வந்தார். 21 பந்துகளில் 21 ரன்களை எடுத்த அவர் 40-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
 
மறு முனையில் கேஎல் ராகுல் நீடித்து பொறுமையாக ஆடிக் கொண்டிருந்தார். 93 பந்துகளில் அவர் 50 ரன்களை அடித்தார். கடைசியாக 43.2 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments