Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரான் இல்லை" - என்ன சொல்கிறார் இலங்கை அமைச்சர்?

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (00:39 IST)
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரி சஹாரன் ஹாஷ்மி இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், "ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 99 சந்தேக நபர்கள், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டனர்," என்று கூறினார்.
 
வெளிநாடுகளில் தங்கியுள்ள 35 சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
 
வெளிநாட்டு புலனாய்வு துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 54 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 50 பேர் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
எஞ்சிய 4 பேரும், அந்தந்த நாடுகளில் இடம்பெறுகின்ற வழக்கு விசாரணைகளின்பின்னர் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 
மொஹமட் சஹரான் என்ற சந்தேக நபருக்கு கீழ் பயிற்சிகளை பெற்ற பெண்கள் தொடர்பிலான தகவல்களும் வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
இவ்வாறு சஹரானுக்கு கீழ் பயிற்சி பெற்ற 17 பெண்கள், தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
 
சரத் வீரசேகர, இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
 
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள பெண்களில் 5 பேர் கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
அதேபோன்று, 7 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 
எஞ்சிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
 
இதேதவிர, இலங்கைக்குள் செயற்பட்டு வருகின்ற இனவாத குழுக்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
கத்தார் நாட்டில் இருந்த மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்ஃபர் நபர், ஈஸ்டர் தாக்குதலுடன் முக்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்ஃபர், 2016ம் ஆண்டு முதல் சஹரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்ஃபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
இதன்படி, இனவாத செயற்பாடுகளுடன், சஹரானை தொடர்புப்பட்டுவதற்கு, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்ஃபர் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
 
இலங்கை ஈஸ்டர் தாக்குதல் பற்றி முன்பே தெரியுமா? ரணில் தரும் புதிய விளக்கம்
மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்ஃபர் என்ற நபர், சஹரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி, அவரை, தற்கொலை தாக்குதலை நடத்தும் வரையான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு பிரதானமாக செயற்பட்டதாக மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்ஃபர் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மாலத்தீவிலுள்ள 4 இனவாத செயற்பாட்டாளர்களை சஹரானுடன் இணைப்பதற்கும் ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை பிரஜைகளாக இருவர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
இதன்படி, ஆஸ்திரேலியாவிலுள்ள லுக்மால் தாலிப் மற்றும் லுக்மால் தாலிப் அஹமட் ஆகியோர் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், மாலத்தீவு இனவாத செயற்பாட்டாளர்கள், இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படும் தினம் வரை இலங்கைக்கு வருகைத் தந்து, இந்த பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க உதவிகளை புரிந்த லுக்மால் தாலிப் என்ற நபர், கட்டார் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
 
ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளையே இவர்கள் பரப்பி வந்துள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 
 
 
இந்த தாக்குதலுக்கு தேவையான பொருட்கள், நிதி மற்றும் சொத்துக்கள் இல்ஹாம் இம்ஷாட் நபரின் வர்த்தக நடவடிக்கைளின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
அதேபோன்று, வெளிநாடுகளிலுள்ள அமைப்புகளின் நிதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செயற்படும் ஐ.எஸ் அமைப்புக்களில் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் 5 வயது முதல் 16 வயது வரை இலங்கையில் கல்வி முறைக்கு அமைய கல்வியை கற்க வேண்டும் என தாம் கோரிக்கை முன்வைப்பதாக அவர் கூறினார்.
 
அவ்வாறு செயற்படாத அனைத்து பாடசாலைகளையும் தடை செய்வதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.
 
இதேவேளை, இலங்கையில் செயற்படும் 11 இனவாத குழுக்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
 
பாடசாலைகளில் தற்போது நடைமுறையிலுள்ள இஸ்லாமிய சமய பாடத்திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments