Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்த தமிழ் சினிமா: ‘பராசக்தி’யின் 70ஆம் ஆண்டு

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (14:02 IST)
திராவிடர் இயக்கத் திரைப்படங்களில் திருப்பு முனையாக அமைந்த பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. தமிழ் திரைப்பட வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் இந்தத் திரைப்படம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

1952ஆம் ஆண்டு. அக்டோபர் 17ஆம் தேதி. சிவாஜி கணேசன் நாயகனாக நடிக்க மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படம் தமிழ்நாடெங்கும் திரையிடப்பட்டது. தி.மு.க. தொண்டர்கள் இதனை தங்கள் கட்சித் திரைப்படமாகப் பார்க்க, எதிர்க் கட்சியினர் படத்தைத் தடைசெய்யும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அதற்குப் பிந்தைய 70 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு இந்தத் திரைப்படம் முக்கியப் பங்களிப்பைச் செய்யும் படமாக அமைந்தது.

1952ஆம் ஆண்டின் தீபாவளி தினம் அன்று. சிவாஜி கணேசனுக்கு அதுதான் முதல் படம். வசனம் எழுதியிருந்த மு. கருணாநிதிக்கு அது ஏழாவது படம். தமிழ்நாட்டில் படம் வெளியான திரையரங்குகளில் எல்லாம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்காக அந்த நேரத்தில் கருதப்பட்ட மதுரை தங்கம் திரையரங்கத்தில் முழுமையாகக்கூட கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. முதல் படமாக பராசக்தி வெளியானது. சுமார் 2,500 பேர் அமரக்கூடிய இந்தத் திரையரங்கில், படிகளிலும் உட்கார்ந்து படத்தைப் பார்த்தார்கள்.

பராசக்தி உருவாக்கப்பட்டதன் பின்னணி

'பராசக்தி' ஒரு வெற்றிகரமான திரைப்படம் மட்டுமல்ல. சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமும்கூட. பராசக்தியின் மூலக் கதையை எழுதியவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பாவலர் பாலசுந்தரம். இந்த நாடகம் தேவி நாடகக் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டுவந்தது.

இந்த நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்சின் பி.ஏ. பெருமாள் முதலியார் அதனைப் படமாக்க விரும்பினார். இதைப்பற்றி அவர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கலந்தாலோசித்தபோது, ஏ.வி.எம். மற்றும் நேஷனல் பிக்சர்ஸ் கூட்டுறவில் படத்தைத் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

முதலில் ஏ.எஸ்.ஏ. சாமியைக் கொண்டு இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. பிறகு கிருஷ்ணன் - பஞ்சுவிடம் இயக்கம் ஒப்படைக்கப்பட்டது. மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் உச்சத்தில் இருந்த மு. கருணாநிதியிடம் திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் நடித்திருந்த பல நாடகங்களைப் பார்த்திருந்த பெருமாள் முதலியார், அவரையே நாயகனாக ஒப்பந்தம் செய்தார். இவர்கள் தவிர, எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், வி.கே. ராமசாமி, டி.கே. ராமச்சந்திரன், பண்டரிபாய், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோரும் படத்தில் நடித்தனர்.

படப்பிடிப்பு துவங்கி, சில ஆயிரம் அடிகள் எடுக்கப்பட்ட பின் படத்தை போட்டுப்பார்த்த மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி கணேசனின் தோற்றமும் நடிப்பும் திருப்தி அளிக்கவில்லை. பெருமாள் முதலியாரை அழைத்து வேறு யாரையாவது அல்லது கே.ஆர். ராமசாமியை நாயகனாக வைத்து படத்தை எடுக்கலாம் என்றார். ஆனால், பெருமாள் முதலியார் ஏற்கவில்லை.

சிவாஜி மிகவும் ஒல்லியாக இருப்பதால் அவ்வாறு கூறுகிறார்கள் என்று எண்ணிய பெருமாள் முதலியார், அவருக்கு பிரத்யேக உணவுகளை அளித்தார். பிறகு, பல காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டது.

பராசக்தி படம் வெளியான தினத்திலிருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. கருணாநிதியின் திரைக்கதையும் வசனமும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன. படத்தில் இருந்த நாத்திக கருத்துகளுக்காக படம் தடைசெய்யப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. எதிர்ப்பு வலுக்க வலுக்க கூட்டமும் அதிகரித்தது.

அப்போது தணிக்கைக் குழுவின் தலைவராக இருந்த ஸ்டாலின் சீனிவாசன், படத்தை மீண்டும் பார்த்தார். படத்தில் ஆட்சேபகரமாக ஏதுமில்லை என்று சான்றளித்தார். படம் பிய்த்துக்கொண்டு ஓடியது.

மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் கருணாநிதியின் வசனங்களுக்குக் கிடைத்த முக்கியத்துவத்தால், படத்தில் முதல் பெயராக அவரது பெயர் ஆங்கிலத்தில் இடம்பெற்றது.

பராசக்தி படத்தின் கதை

1942ஆம் ஆண்டு. தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வசித்துவருகிறாள் கல்யாணி. அவளுடைய சகோதரர்களான சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் ஆகியோர் ரங்கூனில் வசிக்கின்றனர். அந்த சமயத்தில் கல்யாணிக்கு மதுரையில் திருமணம் நிச்சயமாகிறது.

ஆனால், ரங்கூனிலிருந்து சென்னை செல்லும் கப்பலில் ஒருவருக்குத்தான் இடமிருக்கிறது. அதனால், பரிசுப் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்னை வரும் குணசேகரன், ஒரு பெண்ணிடம் ஏமாந்து அனைத்து பொருட்களையும் இழந்து விடுகிறான். அதனால், மதுரைக்குப் போக முடியவில்லை.

போர் உச்சகட்டத்தை நெருங்கும் நிலையில், சந்திரசேகரன், அவனது மனைவி, ஞானசேகரன் ஆகியோர் நடந்தே இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள். வழியில் நடக்கும் குண்டு வீச்சில், ஞானசேகரனின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.

இதற்கிடையில், கல்யாணிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆனால், குழந்தை பிறந்த தினத்தன்றே கணவனும் தந்தையும் இறக்கிறார்கள். இதற்குப் பிறகு ஏற்படும் கஷ்டத்தால், வீடு ஏலம் போகிறது. இதனால், இட்லி கடை வைத்துப் பிழைக்கிறாள் கல்யாணி. அங்கே சிலர் தொந்தரவு செய்ய, வேறு ஒரு பணக்காரனிடம் வேலைக்குச் சேர்கிறாள். அவனும் அவளைத் தவறாக அணுக முயல்கிறான்.

இதற்குள் திருச்சியை வந்தடையும் சந்திரசேகரன் நீதிபதியாகிவிடுகிறார். குண்டு வீச்சில் பிழைத்த ஞானசேகரன் பிச்சை எடுத்துப் பிழைக்கிறான். இதற்கிடையில், கோவிலில் அடைக்கலம் புகும் கல்யாணியை பூசாரியே பாலியல் வல்லுறவு செய்ய முயல, அங்கிருந்து வெளியேறும் கல்யாணி குழந்தையை ஆற்றில் எறிகிறாள். இதனால், காவல்துறை அவளைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. இதற்குப் பிறகு நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

பராசக்தி வெளிவந்தபோது இருந்த அரசியல் சூழல்

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949ல் தி.மு.க. உருவாகியிருந்தது. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951ன் பிற்பகுதியிலிருந்து 1952ன் முற்பகுதிவரை நடந்துகொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில்தான் பராசக்தி உருவாகிக்கொண்டிருந்தது. படம் வெளியானபோது, தேர்தல் முடிந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும், ஒரு சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து அரசியல் கட்சி என்ற நிலையை நோக்கி நகர வேண்டும் என்ற எண்ணம் கட்சியின் எல்லா மட்டத்திலும் வெளிப்பட ஆரம்பித்திருந்தது. அப்படி அரசியல் கட்சியாக வேண்டுமென்றால், தீவிரக் கருத்துகளை முன்வைக்க முடியாது; எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இந்த அம்சங்கள் படத்தில் பிரதிபலித்தன.

"திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் முழக்கப்பட்ட தீவிர கருத்துகள் இந்தப் படத்திலும் இருந்தன என்றாலும் அந்த இயக்கத்தின் வரலாற்றுப் பாதையில் நிகழவிருந்த திருப்பத்தைக் குறிப்பதாகவும் இருந்தது. தி.மு.க. தமிழ்நாட்டில் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் அது உணர்த்தியது" என்ற Economic and Political Weeklyல் எழுதப்பட்ட தன்னுடைய Parasakthi: Life and Times of a DMK Film கட்டுரையில் குறிப்பிடுகிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன்.

இந்தக் கட்டுரை தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தபோது, அந்தக் கட்டுரையின் பல அம்சங்களைப் பாராட்டிய முரசொலி மாறன், நம் தினசரி வாழ்வில் நீதிமன்றங்களின் பங்கை சுட்டிக்காட்டும் வகையில் படம் இருந்தது குறித்து கட்டுரை குறிப்பிட்டிருக்க வேண்டும் எனக் கூறியதாக, தன்னுடைய Karunanidhi: A Life புத்தகத்தில் கூறுகிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

பராசக்தி படத்தின் உச்சகட்ட காட்சியாக, நீதிமன்றக் காட்சி அமைந்திருக்கும். அந்தக் காட்சியில் குணசேகரனாக வரும் சிவாஜி பேசும் காட்சிகள், அந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. "சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளவிரும்பும் அரசியல் கட்சிகளுக்கு உள்ள அரசியல்சாசன நிர்பந்தத்தை அந்தக் காட்சி சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரிகள் மற்றும் திராவிடர் கழகத்தின் தீவிரப் போக்குடைய அரசியலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட போக்கு இது" என முரசொலி மாறன் கூறியதாகச் சொல்கிறார் பன்னீர்செல்வன்.
 

ஆனால், இந்தப் படத்தால் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்க்கட்சிகள் உணர்ந்தே இருந்தன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்தப் படத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. பராசக்தி வெளிவந்த பிறகு தன் மீதும் படத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தனது நெஞ்சுக்கு நீதியில் விரிவாகக் குறிப்பிடுகிறார் கருணாநிதி. இந்தப் படத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி பல கண்டனக் கூட்டங்களை நடத்தியது.

பராசக்தி பெரும் வெற்றிபெற்றதும் படத்தின் மீதும் கருணாநிதி மீதும் பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. ராம்நாத் கோயங்காவால் நடத்தப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த 'தினமணிக் கதிர் 'படத்தின் மீது கடும் தாக்குதலை நடத்தியது.

படம் குறித்து கண்டன விமர்சனம் வெளிவந்திருந்த 'தினமணிக் கதிர்' இதழின் அட்டையில், பராசக்தியைக் கேலி செய்வதுபோல கார்ட்டூன் ஒன்று வெளிவந்தது. அதில் மிக மோசமான ஆடை அணிந்துள்ள பெண்ணின் படத்தை வரைந்து, பரப்பிரம்மம் எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

அடுத்த வரியில், கதை மற்றும் வசவு: தயாநிதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த கருணாநிதி 'பரப்பிரம்மம்' என்ற பெயரிலேயே ஒரு நாடகத்தை எழுதினார். இது காங்கிரஸ்காரர்களின் இதழியல் மற்றும் அரசியல் பற்றிய கேலியாக அமைந்தது. மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நாடகம் திரையிடப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் பல்வேறு குறியீட்டு அம்சங்களை கருணாநிதி புகுத்தியிருந்தார். அந்தத் தருணத்தில் தி.மு.க. திராவிட நாட்டை அடைவதை இலக்காகக் கொண்டிருந்தது. அதைக் குறிக்கும் வகையில் படத்தின் துவக்கமாக, 'வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே' என்ற பாரதிதாசனின் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், இந்தப் படத்தில் கல்யாணிக்குக் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்பது குறித்து கல்யாணி, அவள் கணவர், அவளுடைய தந்தை ஆகியோர் பேசுவதைப் போல ஒரு காட்சி வரும். அதில் ஆண் குழந்தை பிறந்தால் பன்னீர்செல்வம் என்றும் பெண் குழந்தை பிறந்தால் நாகம்மா என்றும் பெயர் சூட்ட முடிவுசெய்திருப்பதாக பேசப்படும். இதில் பன்னீர்செல்வம் என்பது நீதிக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி. பன்னீர்செல்வத்தையும் நாகம்மா என்பது தந்தை பெரியாரின் முதல் மனைவியின் பெயரையும் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.

அதேபோல அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து, ஏழைகளைக் கசக்கிப் பிழிபவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் கள்ளச் சந்தை வியாபாரத்தில் ஈடுபடுவோர் சன்மார்க்க சங்கம் போன்ற ஆன்மீக விவகாரங்களில் ஈடுபடுபவர்களாகவும் காட்டப்படுவார்கள்.

அதேபோல, இந்தப் படத்தில் வந்த பல வசனங்களை அந்த காலத்தில் பலரும் மனப்பாடமாக பேசித் திரிந்தனர்.

குறிப்பாக, பராசக்தி கோவிலில் குணசேகரன் பூசாரியுடன் பேசும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"பூசாரி: ஆ.. அம்பாளா பேசினது?

குணசேகரன்: அம்பாள் எந்தக் காலத்திலே பேசினாள்? அறிவுகெட்டவனே...

பூசாரி: பராசக்தி... பராசக்தி...
குணசேகரன்: அது பேசாது. கல். அது பேசுவதாயிருந்தால், என் தங்கையின் கற்பைச் சூறையாட துணிந்தபோதே, "அடே பூசாரி, அறிவுகெட்ட அற்பனே நில்" என்று தடுத்திருக்காதா? உன் பலாத்கார அணைப்பிலே தவித்த என் தங்கை ஆயிரம் முறை இந்த பராசக்தியை அழைத்தாளாமே? ஓடிவந்து அபயம் கொடுத்தாளா?"

பூசாரி: பக்தகோடிகளே பார்த்துக்கிட்டிருக்கீங்களே...

குணசேகரன்: ஏன் மனித உதவியை நாடுகிறாய் தேவி பக்தனே? உனது தேவியின் கையில் சூலமிருக்க சுடரும் வாளிருக்க..." என்ற நீளும் இந்த வசனம், கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளை எழுப்பியது.

ஆனால், கடவுள் பக்தர்களை முழுமையாக படம் நிராகரிக்கவில்லை. பூசாரி கல்யாணியை பாலியல் வல்லுறவு செய்ய முயலும்போது, கோவிலின் மணியை அடித்து அவளை தப்புவிப்பது விபூதியணிந்த ஒரு பக்தர் என்பதாகத்தான் படத்தில் காட்டப்படும்.

தமிழ்நாட்டின் அரசியலே, உணவு அரசியல்தான்; அதை இந்தப் படத்தில் வந்த 'காக்கா' பாட்டு சுட்டிக்காட்டியது என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். காக்கா "தமிழ்நாட்டில் வெகுகாலமாகவே உணவும் அதனைப் பகிர்ந்தளித்தலும்தான் முக்கியமானதாக இருந்தது. அதுதான் திருக்குறளில் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலாக'வும், மணிமேகலையில் அட்சய பாத்திரமாகவும் பராசக்தியில் காக்கா பாடலாகவும் வெளிப்பட்டது" என்கிறார் அவர்.

மேலும், பராசக்தியின் வெற்றிக்குப் பிறகு, எம்.ஜி.ஆர். இன்னும் தீவிரமாக கருணாநிதியுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அந்த நேரத்தில் காங்கிரசின் பிரதான எதிர்க் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்த நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக திரைப்படங்களை எடுக்க இருவரும் இணைந்து 'மேகலா பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தையும் துவங்கினர் என்கிறார் பன்னீர்செல்வன்.

"பராசக்தி திரைப்படம் சொன்ன முக்கியமான செய்தி, தன்னை தேர்தலுக்கு வடிவமைத்துக்கொள்ள வேண்டிய மொழியாடல் தி.மு.கவுக்குத் தேவைப்படுகிறது என்பதுதான். தீவிர கடவுள் மறுப்பிலிருந்து 'கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக' என்பதை நோக்கி கட்சி நகர்ந்திருந்தது.

அந்தப் படத்தைப் பார்த்தால் விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போகிறார்களோ எனத் தோன்றுகிறது. ஆனால், அந்த மனநிலை தி.மு.கவினரிடம் உருவாகிவிட்ட சூழலை படம் காட்டுகிறது. நாம் அடைய நினைக்கும் சுயமரியாதையும் சமதர்மமும் இறுக்கமான சூழலில் சாத்தியமில்லை; நெகிழ்வான சூழலில்தான் சாத்தியம் என்பதைச் சொல்கிறது" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

சினிமாவை மிக வலுவாகப் பயன்படுத்த முடியும் என்பதை பராசக்தியின் மூலம் திராவிட இயக்கம் காட்டியது என்கிறார் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய ரா. கண்ணன்.

"பராசக்தி அந்த காலகட்டத்தின் திரைப்படம். சினிமாவை வலுவாகப் பயன்படுத்த முடியும் என அப்போது அவர்கள் காட்டினார்கள். அது வரலாற்றைத் திருப்பிப் போட்டது" என்கிறார் கண்ணன்.

தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும்போக்கு சி.என். அண்ணாதுரையிலிருந்து துவங்கியது. அவர் வசனம் எழுதிய 'வேலைக்காரி' திரைப்படத்தில் அண்ணாவின் பெயர், வசனகர்த்தா என்ற முறையில் பெரிதாக இடம்பெறும். இது கருணாநிதியின் காலத்தில் உச்சகட்டத்தை அடைந்தது என்கிறார் கண்ணன்.

"பராசக்தி மு. கருணாநிதியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான படமாக இருந்தது. ஒரு வசனகர்த்தாவாக அண்ணா அடையமுடியாத வெற்றியை கருணாநிதியால் அடைய முடிந்தது. மந்திரி குமாரி, பராசக்தி, மனோகரா ஆகிய மூன்று படங்களும் அவரை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றன. ஆனால், இதிலெல்லாம் துளியும் பொறாமைப்படாமல் இவற்றைக் கவனித்தார் அண்ணா" என்கிறார் கண்ணன்.

பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தற்போதைய சூழலில் அந்தப் படத்தில் வந்த வசனங்களோடும் காட்சிகளோடும் இப்போது ஒரு படம் சாத்தியமா? "ஒவ்வொரு சூழலிலும் ஒரு திரைப்படம் வெளியாகும்.

எதுவும் ஒரு காலகட்டத்தோடு முடிந்துவிட்டதாக நினைக்க முடியாது. பராசக்தி போன்ற படங்கள், தமிழில் மைய நீரோட்ட படமாகவே வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. மைய நீரோட்டத்தில் அப்படிக் கருத்துகளைப் பேசும் இடம் தமிழிலில் இருந்துகொண்டேயிருக்கிறது. இப்போதும் இருக்கிறது" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வம்.

Updated By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்