Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வினோத கிராம்: புகையிலையை நான்கு தலைமுறைகளாக வெறுக்கும் கிராமம்

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (12:35 IST)
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமான கிராமங்கள் என்ற பெயரில் கிராமத்தில் பின்பற்றப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த வழக்க முறைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அதன் வரிசையில் சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமான பழக்க வழக்கத்தையும் முறையாக பின்பற்றும் ஒரு கிராமத்தை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியத்தில் ஏழுசெம்பொன் கிராமம் உள்ளது. சுமார் 750 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஏழுசெம்பொன் கிராமமானது, மலை மற்றும் இயற்கை வளங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த கிராமத்தில் அனைவருக்கும் விவசாயமே பிரதான தொழில். மேலும் பலர் அரசு வேலையில் இருப்பதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். இந்த கிராமத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது, இங்குள்ள மக்கள் யாருமே புகைப்பிடிக்க மாட்டார்கள். கிராமத்தில் எல்லை வரை யாரையும் புகை பிடிக்கவும் விட மாட்டார்கள்.

'புகையிலை இல்லா கிராமம்' என்ற பெயர் தான் இந்த கிராமத்திற்கு செல்லும்போது ஒவ்வொருவர் கண்களிலும் படும் முதல் வரவேற்புப் பலகை. அந்த வரிக்கு ஏற்ப கிராமத்தில் உள்ள அனைவருமே புகையிலை பழக்கத்தை தவிர்த்து, சுமார் நான்கு தலைமுறைகளாக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர்.

'புகையிலை இல்லா கிராமம்' என்ற பெயர் நெடுங்காலமாக இருக்கிறது. இது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது, என்று பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொள்கிறார், ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் புஷ்பராஜ்.

"எனக்கு நினைவு தெரிந்து எங்களுடைய மூதாதையர்கள் காலத்திலிருந்து இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோன்று எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு சொல்லி வளர்த்தனர். நாங்கள் எங்களது பிள்ளைகளுக்கு அதைச் சொல்லி வளர்க்கிறோம். ஆகவே புகை பிடிக்கும் பழக்கம் இந்த கிராமத்தில் யாருக்குமே இருந்ததில்லை.

எங்கள் கிராமத்தின் பொது இடங்களான முக்கிய சாலைகள், தெருக்கள், மறைவான இடங்கள் என எந்த இடங்களாக இருந்தாலும் சரி, பண்டிகை, திருவிழா உள்ளிட்ட நாட்களாக இருந்தாலும் சரி யாருமே புகைப்பிடிக்க மாட்டார்கள்.

ஊருக்குள் இருக்கும் கடைகளிலும் பீடி, சிகெரெட் போன்ற புகையிலை பொருள்கள் எதுவுமே விற்பது கிடையாது. மேலும் பள்ளி கட்டடம், நூலகம், குடிமைப் பொருள் வழங்கும் நிலையம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் புகையிலை இல்லா கிராமம், கிராமத்திற்குள் புகை பிடிக்கக்கூடாது என்று சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்.

வெளியே இருந்து ஏழுசெம்பொன் கிராமத்திற்கு வரும் வெளி ஆட்களையும் புகைப்பிடிக்க விடுவதில்லை. எதிர்பாராத விதமாக புது ஆட்கள் தெரியாமல் புகை பிடித்தால் உடனே அவர்களிடத்தில் கூறி புகைப்பதைத் தடுத்து விடுவோம்.

மேற்கொண்டு அவர்களிடம் கிராமத்திற்கு வெளியே சென்று புகை பிடித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவோம். வெளியூர்களில் இருந்து வருபவர்களும் அதைக் கேட்டுக்கொள்வார்கள். அதை மீறி யாராவது புகை பிடித்தால் ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் அளிப்போம். இதுவரை கேட்காமல் யாரும் இருந்ததில்லை," என புஷ்பராஜ் தெரிவித்தார்.

இதே கிராமத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பெட்டிக் கடை நடத்தி வரும் வசந்தா சக்கரவர்த்தி கூறுகையில், "இந்த கிராமத்தில் நாற்பது ஆண்டுகளாக நாங்கள் கடை வைத்துள்ளோம். இதுவரையிலும் எங்கள் கடையில், பீடி, சிகெரெட் உள்ளிட்ட எந்த புகையிலை பொருட்களையும் விற்றதில்லை. கிராமத்தில் உள்ள மற்ற கடைகளுக்கும் இதே போன்று தான் பின்பற்றி வருகின்றனர்.

எங்கள் கிராம மக்கள் யாருக்கும் இந்த பழக்கம் இல்லை. ஊர் கட்டுப்பாடு காரணமாக கடைகளில் பீடி, சிகெரெட் கேட்கமாட்டார்கள். ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் ஆட்கள் தவறுதலாக சிகெரெட் கேட்பதுண்டு. அப்படி கேட்கும் பட்சத்தில், எங்கள் கிராம கட்டுப்பாடு மற்றும் வழக்கமுறை குறித்து எடுத்துரைப்போம்," என்கிறார் அவர்.

எதனால் இந்த வழக்கமுறை ஏற்பட்டது

எதனால் இந்த வழக்கம் கிராமத்தில் ஏற்பட்டது என்பது குறித்து தெரிந்து கொள்ள 67 வயது முதியவர் பெருமாளிடம் பேசினோம்.

"எனது தந்தைக்கு முன்பிருந்த தலைமுறையினர் வாழ்ந்த காலங்களில், கிராமம் முழுவதுமே குடிசைகளாக இருந்தது. அப்போது யாரோ ஒருவர் புகைப்பிடித்து விட்டு அதை கீழே போட்டுள்ளார். அந்த புகையிலையில் இருந்த நெருப்பு எதிர்பாராதவிதமாக குடிசை மீது பட்டு தீ பற்றியது. அதிலிருந்து அருகே இருந்த பல குடிசை வீடுகளிலும் தீ படர்ந்து குடிசைகள் அனைத்தும் கருகின.

அந்த சம்பவத்திற்கு பிறகு ஊர் பஞ்சாயத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி, கிராமத்தில் யாரும் புகைப்பிடிக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. அதிலிருந்து இந்த கிராமத்தில் புகையிலை என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நான்கு தலைமுறைகள் கடந்துவிட்டன. இன்று வரை கிராம சொல்லுக்கு கட்டுப்பட்டு யாருமே புகைப்பிடிப்பதில்லை," என்று பெருமாள் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments