Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிக்க கணிதம், இயற்பியல் தேவையில்லை என்ற அறிவிப்பு: கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (14:44 IST)
சில பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இனி கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை 12 ஆம் வகுப்பில் படித்து இருக்க வேண்டிய அவசியமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கல்வியாளர்கள் பல காரணங்களையும், கேள்விகளையும் முன்வைத்து கடுமையாக எதிர்க்கிறார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம்,வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்து படித்த மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிக்க முடியும் என்ற சூழல் இருந்தது.

இது கட்டாயமாகவும் இருந்தது. ஆனால் செய்வாய்க்கிழமை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்ட குறிப்பேட்டில் சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மேற்கண்ட படிப்புகளை பள்ளியில் தேர்ந்தெடுத்து படிக்காதவர்கள் கூட கட்டடக் கலை , ஃபேஷன் டெக்னாலஜி , பேக்கேஜிங் டெக்னாலஜி போன்ற படிப்புகளில் சேரலாம் என அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பு வரும் 2022-2023 கல்வியாண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் எனவும் ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.

பொறியியல் முதலாம் ஆண்டில் கணிதம், வேதியியல் போன்ற பாடங்களின் அடிப்படைகள் பொறியியல் படிப்பின் முதலாம் ஆண்டில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் என்றும் அந்த குறிப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது.

கணிதம் கட்டாயமில்லாத பொறியியல் படிப்புகள்

வேளாண் பொறியியல் (Agriculture), உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி), ஃபேஷன் டெக்னாலஜி, ஜவுளி வேதியியல் (டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி), ஆகிய பொறியியல் படிப்புகளில் சேர கணிதம் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் கட்டாயம் இல்லாத பொறியியல் படிப்புகள்

திட்டமிடல் (பிளானிங் ), கணிப்பொறி அறிவியல் (கம்ப்யூட்டர் சைன்ஸ் ), மின்னியல் பொறியியல் , மின்னணுப் பொறியியல் போன்ற பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல் கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஐசிடிஇ வெளியிட்ட இந்த அறிவிப்பு நிறைய மாணவர்களுக்கு இன்ஜினியரிங் சேருவதற்கான வாய்ப்பை ஒருபுறம் ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், மற்றொருபுறம் இது வழங்கப்படும் கல்வியின் தரத்தை பாதிக்குமா என்னும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இது குறித்து மூத்த கல்வியாளரும், பேராசிரியரியுமான சிவகுமாரிடம் பிபிசி தமிழ் இது குறித்து கருத்து கேட்டது.

பள்ளியில் அறிவியல், கணிதம் அல்லாத பிரிவுகளைத் தேர்ந்து எடுத்து படித்த மாணவர்கள் கூட பொறியியல் படிக்கும் வாய்ப்பை இந்த அறிவிப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பு வரவேற்க தக்க அறிவிப்பு அல்ல என்றார் அவர்.

"தேசிய கல்விகொள்கை 2020ன் படி இந்த முறையை கொண்டுவந்ததாக கூறுகிறார்கள். ஆனால் பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கு கணிதம் அவசியம். இதற்கு அடிப்படை கணித அறிவு மிக அவசியம். இந்த அறிவை ஒரு வருட பயிற்சியில் கல்லூரி மாணவர்களுக்கு அளித்து விட முடியும் என்பது நம்பும்படி இல்லை.

கணிதம் அனைத்துப் பொறியியல் பாடங்களுக்கும் அடிப்படையான ஒன்றாகும்.

பொறியியல் என்பது புதுப் புது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு படிப்பு ஆகும். புது கண்டுபிடிப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தின் அறிவு மட்டுமே போதாது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று படிப்புகளின் அடிப்படை அறிவும் அவசியமானது ஆகும்.

இவர்களின் புது கல்விக் கொள்கையின் மூலம் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்வதற்கு தகுதியான பணியாளனை உருவாக்க முடியும். ஏனெனில் அவர்கள் தனியாக பயிற்சி அளித்துக் கொள்வார்கள். திறமையான பொறியாளர்களை உருவாக்க முடியுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே,

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாணவர்களை உற்பத்தி செய்து அனுப்புவது அல்ல கல்வி. இது நோக்கமாக இருக்க கூடாது. கல்வியில் தன்னிறைவு அடைவதே நோக்கமாக இருக்க வேண்டும்" என்றார் அவர்.

மேலும் இது குறித்துப் பேசிய அவர் ஏஐசிடிஇ அங்கீகரித்த கல்லூரிகளில், கடந்த 5 ஆடுகளில் 500 க்கும் மேற்பட்டவை போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டதாகவும், எனவே இது, அந்தக் கல்லூரிகளின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவா என தனக்கு சந்தேகம் தோன்றுவதாகவும் கூறினார்.

இது குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காதது ஏன் எனவும் கேள்வி அவர் எழுப்பினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்றால், உயர் கல்வித்துறை அமைச்சரிடம் இது குறித்து கருத்துக் கேட்டிருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சில கேள்விகளை இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு முன் வைத்துள்ளார்.

1. ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் பயோ டெக் படிப்பதற்கு கணித கேள்விகளை நீக்கச் சொல்வார்களா? கேட் (GATE ) தேர்வில் கணித கேள்விகளை நீக்கச் சொல்வார்களா?

2.இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இளநிலை கணிப்பொறி அறிவியல் , மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு வேதியியல் படிப்பு அவசியம் இல்லை என கூறும் ஏஐசிடிஇ இந்தப் படிப்புகளில் முதலாண்டில் வேதியியல் பாடத்தை நீக்குவார்களா? இந்த பரிந்துரைகளை ஏற்கவேண்டும் என்று ஐஐடிகளை வலியுறுத்துவார்களா?

3.உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் ( AI &ML ) ஆகிய பாடங்களை அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் சேர்க்கிறார்கள். இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் வேளாண் பொறியியல், பேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி போன்ற சில படிப்புகளுக்கு கணிதம் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது. கணித அறிவு இல்லாமல் அவர்களால் செயற்கை நுண்ணறிவியலையும், மெஷின் லேர்னிங்கையும் படிக்க முடியுமா என்று தனது தொடர் ட்வீட்களில் கேட்டுள்ளார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

மொத்தத்தில் ஏ.ஐ.சி.டி.இ-ன் இந்த அறிவிப்பு குறித்து பல விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

இன்று மாலை மற்றும் இரவில் 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

பிரியங்காவை பார்க்க வந்த கூட்டம், ஓட்டு போட வரவில்லையா? வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments