Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதட்டோடு உதடு சேரும் அந்த 'முதல் முத்தம்' நமக்கு சொல்லும் செய்தி!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (08:49 IST)
காதல் திரைப்படங்களால் உந்தப்பட்டதாலோ அல்லது இவர்தான் நமக்கான நபர் என்று அறிவதற்கு சிறந்த வழியாக இருப்பதாலோ, முதல் முத்தத்தின் மீது நாம் அதிக மதிப்பு வைக்கிறோம். முத்தமிடுதல் ஏன் அவ்வளவு சிறந்தது?
 
முதல் காரணம், குழந்தையாகப் பிறந்ததில் இருந்தே உதட்டின் மூலம் தொடுவது நமக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. தாய்ப்பால் அருந்தும் காலம் முதலே நம்முடைய உதடு இத்தகைய பழக்கத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறது.
 
உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் பழக்கம் மீது மனிதர்களுக்கு இயல்பாகவே விருப்பம் ஏற்படுவதற்கு ஏற்ப நாம் சில மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளோம் என்ற பார்வையும் உள்ளது.
 
ஏனெனில், நாம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்பு, தாய்ப்பால் ஊட்டும் காலத்திற்கு முன்பு, தாய் முதலில் உணவைத் தன் வாயால் மென்று அதைக் குழந்தைக்குத் தன் வாயாலேயே ஊட்டுவார். ப்ரீமாஸ்டிகேஷன் (premastication) என இது அழைக்கப்படுகிறது. இது, மனிதக்குரங்கு இனத்தில் நன்கு அறியப்பட்ட பழக்கமாக உள்ளது.இரண்டாவதாக, நம் உடலில் உணர்திறன் அதிகம் உள்ள பகுதி உதடு. அதை நாம் ஆடையால் மூடுவது இல்லை.
 
மானுடவியல் அறிஞர் வில்லியம் ஜான்கோவியாக் கூறுகையில், "நாம் அதிகமான ஆடைகளை அணியும்போது நாம் அதிகமாக முத்தமிடுகிறோம். குறைவான ஆடைகளை அணியும்போது குறைவாகவே முத்தமிடுகிறோம்," என்றார்.
 
பழங்குடியினரின் முத்தம்
 
ஆனால், இதற்கு ஒரு சுவாரஸ்யமான விதிவிலக்கு ஒன்று உள்ளது. நாம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் சமூகமாக இருந்தபோது முத்தமிடுதல் குறித்த சான்றுகள் இல்லை. ஆனால், விதிவிலக்காக ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழும் இன்யூட் பழங்குடியினர் (inuit) உள்ளனர்.
 
வேட்டையாடி உணவு சேகரிக்கும் சமூகமாக, அவர்களிடத்தில் மட்டுமே முத்தமிடும் பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 'ஓசியானிக் முத்தம்' (Oceanic kiss) எனப்படுகிறது. அதாவது, மூக்கோடு மூக்கை உரசி முத்தமிடுவது, உதட்டோடு உதடு அல்ல.
 
ஏன் அவ்வாறு செய்கின்றனர்?
மற்ற பகுதிகளில் உள்ள வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடியினர் ஆடைகளை அணிவதில்லை. இதனால், உடலின் வேறு எந்தப் பகுதி மூலமாகவும் அவர்களால் சிற்றின்பத்தை அனுபவிக்க முடியும். மாறாக, ஆடைகளை அணியும்போது சிற்றின்பத்திற்காக நாம் தொட்டுணரக்கூடிய பகுதியாக நமது முகம் மட்டுமே உள்ளது. இன்யூவட் பழங்குடியினர் ஆடைகளை அணிகின்றனர்," என்கிறார்.
 
கடைசியாக, முத்தமிடுவதற்கு பரிணாம நோக்கம் இருந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும்போது வாசனை மூலம் அவர்களின் நடத்தை குறித்த குறிப்புகளைப் பெறுகிறோம். இந்தக் கடைசி காரணமே, உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது ஏன் பொதுவான மனித நடத்தை இல்லை என்பதை உணர்த்துகிறது.
 
ஒட்டுமொத்த கலாசாரங்களில் பாதிக்கும் குறைவான கலாசாரங்களிலேயே உதடுகளின் மூலம் முத்தமிடுகின்றனர் என ஓர் ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள 168 கலாசாரங்களில் 46% கலாசாரங்களில் மட்டுமே காதல் நோக்கத்துடன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுகின்றனர் என, வில்லியம் ஜான்கோவியாக் கண்டறிந்துள்ளார்.
"முத்தமிடுவதைத் தவிர்த்தும் கூட மனிதர்கள் சிற்றின்பத்தை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன என்பதைத்தான் இது காட்டுகிறது. பெரும் சிக்கல் நிறைந்த சமூகத்தில் முத்தமிடும் வழக்கம் அதிகம் இருப்பதைக் காணலாம்," என்கிறார், வில்லியம்.
 
3,500 ஆண்டுகள் பழமையான இந்து வேத சமஸ்கிருத நூல்களில் முத்தமிடும் பழக்கம் குறித்த சான்றுகள் காணக் கிடைக்கின்றன.
 
முத்தம் தொடர்பான விநோத பழக்கங்கள்
 
'தி சயின்ஸ் ஆஃப் கிஸ்ஸிங்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஷெரில் ஆர். கிர்ஷென்பௌம் கூறுகையில், "உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் பழக்கம் பல கலாசாரங்களில் உள்ளது. டார்வின் குறிப்பிட்ட 'மலேய் முத்தத்தில்' (Malay Kiss) பெண்கள் தரையில் அமர்ந்தும் ஆண்கள் ஒருவிதத்தில் தொங்கிக்கொண்டும், ஒருவரையொருவர் நுகர்ந்து பார்ப்பார்கள். தன் துணையின் வாசனையை அறிவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
 
என்னுடைய ஆய்வுக்காக நான் சென்ற பகுதிகளில் ட்ரோப்ரியண்ட் தீவுகளில் ஒரு விநோத பழக்கம் இருந்தது. காதலர்கள் இருவரும் அமர்ந்துகொண்டு, நெருக்கமாக உணரும்போது ஒருவரையொருவர் தங்கள் கண் இமைகளை லேசாக கொறிக்கின்றனர். இதை நம்மில் பலரும் 'ரொமாண்டிக்' என நினைக்க மாட்டோம். ஆனால், அது அவர்களின் யுக்தியாக உள்ளது.
 
ஒருவரையொருவர் நெருக்கமாக, அவர்கள் மீதான நம்பிக்கையை உணரும் ஒன்றாக இது உள்ளது. இது நம்பிக்கை மற்றும் பிணைப்பு சார்ந்து. நம் அன்புக்குரியவர்களை நோக்கி நெருக்கமாக ஆக்குவதே இந்தப் பழக்கங்களின் பொதுவான நோக்கமாக உள்ளது," எனத் தெரிவித்தார்.
 
மற்ற உயிரினங்கள் முத்தமிடுவதில்லையா?
 
உதட்டோடு உதட்டை அழுத்தி முத்தம் கொடுப்பது மனிதர்களுக்கே உரிய பழக்கமாக உள்ளது. முத்தமிடுதல் பரிணாம வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது எனில், ஏன் பெரும்பாலான விலங்குகளிடையே நாம் அந்தப் பழக்கத்தைப் பார்ப்பதில்லை?சில பறவைகள் காதல் உறவில் தங்கள் அலகுகளை உரசிக்கொள்ளும். பெரும்பாலான பாலூட்டி இனங்கள் நுகர்வதன் மூலம் தன் நண்பர் அல்லது எதிரியை அடையாளம் காணும். சில விலங்கினங்கள் மட்டுமே உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுகின்றன.
 
மனிதர்களின் நுகரும் திறன் பல பாலூட்டி இனங்களைவிட மிகவும் குறைவானதால்கூட இது இருக்கலாம். நுகரும் திறன் அதிகமாக இருப்பதாலேயே, முகத்தோடு முகத்தை அழுத்தாமலேயே விலங்குகள் மற்றவற்றின் வாசனையை அறிகின்றன.
 
ஆனால், ஒருவரின் வாசனையை அறிவதற்கு மனிதர்கள் அவர்களுக்கு மிக நெருக்கமாகச் செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்காக மனிதர்கள் முத்தமிட ஆரம்பித்தனர்.
 
ஆனால், ஏன் சில கலாசாரங்களில் மனிதர்கள் முத்தமிடுவதில்லை? நாம் எப்போதும் முத்தமிடுவதைத் தொடர்கிறோமா?
 
ஷெரில் ஆர். கிர்ஷென்பௌம் கூறுகையில், "பல்வேறு காரணங்களுக்காக உலகம் முழுவதுமே முத்தமிடும் பழக்கம் தோன்றி மறைந்திருப்பதைக் காணலாம். சில நோய்களைத் தவிர்ப்பதற்காக முத்தமிடும் பழக்கம் மறைந்திருக்கலாம். நோய்க்கிருமிக் கோட்பாடு வருவதற்கு முன்பாகவே உடல்நலமில்லாமல் போவதைத் தவிர்க்க முத்தமிடுவதைத் தவிர்த்திருக்கலாம்.
 
அரசர்கள் பலர் மக்கள் முத்தமிட்டுக் கொள்வதற்குத் தடை விதித்திருந்தனர். ஏனெனில், முத்தமிடுவது மக்களுக்கானது அல்ல, அது ஒரு சலுகை என அந்த அரசர்கள் கருதினர்.
ஆனால், நோய்கள், தடை என எந்தக் காரணத்துக்காக முத்தமிடும் பழக்கம் மறைந்தாலும், அது மீண்டும் தோன்றியிருக்கிறது.
 
'பிபிசி ரீல்ஸ்' (BBC Reels) பகுதிக்காக வில் பார்க் தயாரித்த காணொளியின் அடிப்படையில் எழுதப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

35 பேரை காரை ஏற்றிக் கொன்ற நபர்! சாலையெங்கும் சிதறிக் கிடந்த பிணங்கள்! - சீனாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments