Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

"காஷ்மீர் குறித்த எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" – பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோ

India Pakistan
, சனி, 6 மே 2023 (21:35 IST)
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது” என்று கூறினார்.
 
பிலாவல் புட்டோ, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்திற்குச் சற்று முன்பு பிபிசிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் "காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" எனக் கூறினார்.
 
பிலாவல் இந்தியா வருவதற்கான முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் முந்தைய கூட்டங்களில் பாகிஸ்தான் அமைச்சர்கள் காணொளி மூலம் பங்கேற்பதுதான் வழக்கமாக இருந்தது.
 
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். அவருடைய ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு சைகையும் ஊடகங்களின் பார்வையிலிருந்து தப்பவில்லை.
 
வானிலையில் குழப்பம்: கோடை வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்புவது ஏன்?
 
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் கைகுலுக்கவில்லை என்பதை ஏற்கெனவே ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. SCO கூட்டத்திற்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை பயங்கரவாதத்தின் "தூதர் மற்றும் செய்தித் தொடர்பாளர்" என்று வர்ணித்தார்.
 
“உதவி கோரப்படவும் இல்லை, வழங்கப்படவும் இல்லை”
 
தற்சமயம், பாகிஸ்தான் கடுமையான அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்டை நாடான இந்தியா, பாகிஸ்தானுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?
 
"கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடி நேரத்திலும், நிலநடுக்கத்தின்போது துருக்கிக்கும் இந்தியா உதவியது பேசு பொருளானதால், பாகிஸ்தானுக்கும் அப்படி உதவ முடியுமா?" என்ற இந்தக் கேள்வியும் எழுகிறது.
 
இந்தக் கேள்வியை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் முன்வைத்தபோது, அவர் சிரித்துக் கொண்டே, “நாங்கள் கேட்கவில்லை, அவர்கள் வழங்கவும் இல்லை” என்றார்.
 
"பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது" என்று இந்தியா கூறி வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி பிபிசியிடம், "ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்தியா எடுத்த தனது முடிவை மறுபரிசீலனை செய்யாத வரை, பேச்சுவார்த்தை பலனளிக்காது” என்றார்.
 
ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்தியா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை யூனியன் பிரதேசமாக அறிவித்தது, அதன் பிறகு இந்தியாவுடனான தூதரக உறவை பாகிஸ்தான் மட்டுப்படுத்திக்கொண்டது.
 
கோவாவில், பிலாவல் புட்டோ சர்தாரி, "தற்போதைய சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்குவது இந்தியாவின் பொறுப்பு. எனவே பாகிஸ்தானின் பார்வையில், ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்தியா எடுத்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது, தீவிரமானது. அதை மறுபரிசீலனை செய்யாத வரை இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு அர்த்தமில்லை,” என்றார்.
 
பிலாவல் புட்டோ இப்போது இந்தியா வந்திருப்பதால், இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவாரா? இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் எஸ்சிஓ கூட்டத்திற்கு மட்டுமே வந்திருப்பதாகவும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை எதுவுமில்லை” என்றும் கூறினார்.
 
அவர் இந்தியா வந்தது குறித்து பாகிஸ்தானில் எழுப்பப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டதற்கு, “காஷ்மீர் தொடர்பான எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று பிலாவல் புட்டோ கூறினார்.
 
வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "பிரிவு 370 இப்போது வரலாறு" என்று கூறினார்.
 
எஸ்சிஓ கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிட்டார்.
 
"பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுடன் பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுவதில்லை" என்று அவர் கூறினார்.
 
பிபிசி உடனான உரையாடலில், பிலாவல் புட்டோ சர்தாரி, "பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானைப் போல வேறு எந்த எஸ்சிஓ உறுப்பு நாடும் பயங்கரவாதத்திற்குப் பலியாகவில்லை" என்று கூறினார்.
 
அவரது தாயார் பேநஸிர் புட்டோவின் படுகொலையை நேரடியாகக் குறிப்பிடாமல், "நானே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த வலியை நான் தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்கிறேன்," என்று கூறினார்.
 
"பயங்கரவாதத்திற்கு நாம் உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், உண்மையான கவலைகளில் இருந்து வெற்றுப் பேச்சுகளை வகையறிய வேண்டும். பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் உண்மையான கவலைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பாகிஸ்தானுக்கும் அதன் சொந்தக் கவலைகள் உள்ளன."
 
பாகிஸ்தானில், பிலாவல் புட்டோவின் இந்தியப் பயணம் பலரால் வரவேற்கப்பட்டாலும் அது விமர்சனத்துக்கும் உள்ளானது.
 
எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் காணொளி மூலம் கலந்து கொண்டார். எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் காணொளி மூலம் கலந்து கொண்டது.
 
அப்படியிருக்க, பிலாவல் புட்டோ சர்தாரி இந்தியா வரவேண்டிய அவசியம் என்ன, அவர் விரும்பியிருந்தால் கோவா கூட்டத்திலும் அவர் காணொளி மூலம் கலந்து கொண்டிருக்கலாம்.
 
பாகிஸ்தானில் பிலாவலின் இந்தியப் பயணம் குறித்து கேள்வி எழுப்புவோரின் கூற்று, அவர் இந்தியாவுக்குச் சென்றதன் மூலம் பாகிஸ்தானின் பாரம்பரிய நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்திவிட்டார் என்பதே.
 
பிபிசி-யுடனான உரையாடலில், பிலாவல் புட்டோ சர்தாரி, இந்தக் கூட்டத்திற்குத் தான் வந்தது, இந்தக் கூட்டமைப்பை பாகிஸ்தான் எவ்வளவு தீவிரமாகப் பார்க்கிறது என்பதை உணர்த்தும் செய்தி என்றார்.
 
மேலும் அவர், "மற்றவர்களின் மெய்நிகர் பங்கேற்பு மற்றும் எனது தனிப்பட்ட பங்கேற்பு குறித்த கேள்விகளைப் பொருத்தவரை, மற்ற நிகழ்வுகள் தொழில்நுட்பரீதியாக SCO இன் பகுதியாகும்.
 
ஆனால் அவை வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் மற்றும் நாட்டின் தலைவர்களின் மாநாடு போன்ற அதிகாரப்பூர்வமானவை அல்ல. எனவே அதைக் கருத்தில் கொண்டு, ஒரு முக்கியமான மன்றத்தில் பாகிஸ்தானின் பார்வையை முன்வைக்க, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்துவது அவசியம் என்பது எங்கள் கருத்து," என்றார்.
 
எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோவா வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அவர் எஸ்சிஓ உறுப்பினர் என்பதால் இங்கு வந்துள்ளார். அதற்கு மேல் அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை. நீங்களும் அந்த அளவில் பார்த்தால் போதும்,” என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்றுநோய் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி