டி.என்.பி.எஸ். சி `குரூப்-4` தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையில் கலந்து கொண்ட 40 பேருக்கு மாதிரி தேர்வு ஒன்று நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையத்தில் தேர்வெழுதிய 13 பேர் மற்றும் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வெழுதிய 27 பேர் உள்ளிட்ட 40 பேர் இந்த விசாரணையில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள்.
டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார்
முன்னதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுகளில் வெற்றி பெற்ற முதல் 100 பேரில், 35-க்கும் மேற்பட்டவர்கள் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் தேர்வெழுதியதாக சர்ச்சை எழுந்தது.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த இரண்டு தேர்வு மையங்களில் விசாரணை நடத்திய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தின் செயலாளர் நந்தகுமார், இந்தக் குற்றச்சாட்டு குறித்து எவ்வித பாரபட்சமுமின்றி விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளின் சந்தேக வளையத்திற்குள் இருந்த 40 பேரும், விசாரணைக்காக சென்னை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்
சர்ச்சைக்குள்ளான இந்த தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்றவர் சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணூர் பகுதியை சேர்ந்த திருவராஜு. இவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையிலுள்ள மையத்தில் தேர்வெழுதாமல், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுத காரணம் என்ன? என்ற சர்ச்சையும் எழுந்தது.
திருவராஜு
இதனை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த திருவராஜு, ’’நான் சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்து, சிவகங்கை அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முடித்துள்ளேன். தற்போது ஆடு மேய்த்து வரும் நான், 7 முறை டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதியுள்ளேன். இந்த தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். இந்த வெற்றிக்காக நான் பல ஆண்டுகள் வெறியோடு படித்து வந்தேன். ராமேஸ்வரம் பகுதியில் ஆடுகள் மேய்த்து வந்ததால், அந்த பகுதியில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தேன். டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளின் விசாரணையில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பேன்.`` என்றார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திற்கு சென்ற திருவராஜு உள்ளிட்ட 40 பேருக்கு , அங்கு தேர்வு ஒன்று நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விசாரணை குறித்து கருத்து கேட்பதற்காக, திருவராஜுவின் செல்பேசிக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது செல்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.