Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் 2021: இருதரப்பும் கையாளும் "ஹிந்துத்துவா" ஆயுதம்

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (23:44 IST)
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி பாஜகவின் இந்துத்துவா என்ற ஆயுதத்தைக் கண்டு ஆடிபோயிருப்பதாக தோன்றுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, தனது முதல் நந்திகிராம் சுற்றுப்பயணத்தின் போது தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்ட பின்னர், தன்னை ஒரு பிராமண குலத்தைச் சேர்ந்தவர் என்றும் மண்ணின் மகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டது கூட பாஜகவின் ஹிந்துத்துவா ஆயுதத்திற்கான பதிலடி என்று கூறப்படுகிறது. பாஜகவை விட தன்னை அதிகமாக இந்து என்று காட்டிக்கொள்ள அவர் பேரணி மேடையிலேயே சண்டி வந்தனம் நிகழ்த்திக்காட்டினாரோ என்ற கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம் அரசியல் வட்டங்களில் இப்படித் தான் நம்பப்படுகிறது.மாநிலத்தின் மிகப்பெரிய பண்டிகையான துர்காபூஜையின் போது சண்டி வந்தனம் ஸ்லோகம் பாராயணம் செய்யப்படுவது வழக்கம். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகிவிட்ட நந்திகிராமைக் கைப்பற்ற, ஆட்சியதிகாரம் கோரும் இரு கட்சிகளும் (பாஜக மற்றும் டி எம் சி) உறுதிபூண்டுள்ளன.
 
இந்தத் தொகுதி இரு கட்சிகளுக்கும் கௌரவப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதன் தேர்தல் முடிவு, அதன் வேட்பாளர்கள் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கக்கூடும் என்று கூறினாலும் மிகையாகாது.
 
ஆட்சியைக் கைப்பற்ற அடித்தளம்
மமதா
பட மூலாதாரம்,ANI
மமதாவின் வலது கையாக இருந்த நந்திகிராமின் முன்னாள் எம்எல்ஏ சுபேந்து அதிகாரியைத் தான் மம்தாவிற்கு எதிராக அதே தொகுதியில் நிறுத்துகிறது பாஜக. கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தில் ஹல்தியா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பகுதியில், 2007 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒரே இரவில் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானது.
 
இந்த இயக்கம் தான் 2011 ஆம் ஆண்டில் மம்தா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, அடித்தளம் அமைத்தது.இந்த இயக்கத்தின் வலிமையான தூணாக இருந்த சுபேந்து அதிகாரி, இப்போது பாஜகவில் சேர்ந்து மம்தாவுக்கு எதிராக களத்தில் உள்ளார்.இந்தத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக மமதா அறிவித்த பின்னர், சுபேந்து மற்றும் பாஜக அவரை மண்ணின் மகள் இல்லை என்று விமரிசித்து வருகின்றன.
 
இந்துத்துவ சித்தாந்தம்
மமதா
பட மூலாதாரம்,ANI
ஆனால் பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு, தனது முதல் நந்திகிராம் சுற்றுப்பயணத்தில் பதிலளித்த மம்தா, அதன் இந்துத்துவ சித்தாந்தம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
 
அவர் உணர்ச்சிபூர்வமான தனது உரையில், "நீங்கள்- மக்கள் விரும்பவில்லை என்றால், நான் இங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டேன்" என்று மம்தா கூறினார்.
 
உண்மையில், நந்திகிராமில் வாழும் மக்களின் சமூகப் பின்னணியினைப் பார்த்தால், இரு கட்சிகளும் இங்கு இந்துத்துவா தத்துவத்தைக் கை கொள்வதன் காரணம் புரியலாம். இந்த தொகுதியில், மக்கள் தொகையில் 30 சதவீதம் சிறுபான்மையினர், 70 சதவீதம் இந்துக்கள். இந்த இந்து வாக்காளர்களை நம்பி பாஜக இருப்பது போல், சிறுபான்மை வாக்காளர்கள் மீது மம்தாவுக்கு நம்பிக்கை உள்ளது.
 
நந்திகிராமில் தலித் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 40 சதவீதம். இந்த வாக்காளர்களின் ஆதரவில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.இது தவிர, இரு கட்சிகளும் ஒருவரின் வாக்கு வங்கி குறித்து மற்றவர் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்த, வெவ்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்கின்றன.
 
பாஜக மமதாவை ஒரு வெளியார் என்று கூறி வருவதுடன், திருப்திப்படுத்தி வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.
 
மமதா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி: தான் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?
மம்தா பானர்ஜி குறித்த 10 தகவல்கள்
நந்திகிராமிற்கான இந்தப் போராட்டத்தில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் உள்ளது. இடதுசாரிகள்-காங்கிரஸ்-ஐ.எஸ்.எஃப் கூட்டணி முன்னதாக இந்த இடத்தை பிர்சாதா அப்பாஸின் கட்சிக்கு வழங்க முடிவு செய்திருந்தது.இதனால் மமதாவின் சிறுபான்மை வாக்கு வங்கியின் வாக்குகளில் இழப்பு ஏற்படும் என்று பாஜக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது சிபிஎம் தனது வேட்பாளரை இந்தத் தொகுதியில் நிறுத்த பரிசீலித்து வருகிறது.
 
இதனால் எரிச்சலடைந்த பா.ஜ.க, டி.எம்.சி, இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் அப்பாஸ் சித்திகி இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. மறுபுறம், மமதாவும் பாஜகவின் இந்துத்துவ வியூகத்தை விமரிசித்து வருகிறார்.
 
பாஜக-வின் ஹிந்துத்துவா ஆயுதம்
மமதா
பட மூலாதாரம்,SANJAY DAS/BBC
நந்திகிராமில், அவர் தன்னை 'கரேர் மேயே' அதாவது, வீட்டுப் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்துத்துவா ஆயுதத்தை கைகொள்வதைத் தவிர்க்குமாறு பாஜகவை எச்சரித்தார். அவர், "மதத்துடன் விளையாட வேண்டாம். ஆட்டம் நடக்கட்டும். என் பெயரை மறந்தாலும் மறப்பேன், ஆனால் நந்திகிராமை மறக்கமாட்டேன்." என்று கூறியுள்ளார்.நந்திகிராமில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீட்டை மம்தா வாடகைக்கு எடுத்துள்ளார். ஆண்டில் குறைந்தது மூன்று மாதங்களாவது அவர் இங்கு தங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பாஜக என்று பெயர் குறிப்பிடாமல், "நான் ஒரு இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றும், தினமும் காலையில் சண்டி வந்தனம் ஸ்லோகம் பாராயணம் செய்கிறேன் என்றும் இந்து-முஸ்லீம் பிரிவினை பேசுபவர்களுக்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். என்னுடன் இந்துத்துவா பெயரைச் சொல்லி விளையாட வேண்டாம்" என்று கூறினார்.இந்து விரோதம் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், காவி கட்சியின் தலைவர்களை விட இந்து மதம் மற்றும் அதன் மரபுகள் பற்றித் தனக்கு அதிகம் தெரியும் என்று கூறினார்.தனது மதம் குறித்து யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்களுடன் வாக்குவாதம் செய்து இந்து மந்திரங்களைப் பாராயணம் செய்வதில் போட்டியிடவும் தான் தயாராக இருப்பதாக மம்தா சவால் விடுத்தார்.
 
முதல்வரின் கேள்வி
 
மமதா, "இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு சிறந்த இந்துக்கள் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். அந்தக் கட்சி 70-30 புள்ளிவிவரங்களுடன் விளையாடுகிறது" என்றார்.
 
அதன் பிறகுதான் மமதா சண்டி வந்தனத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கினார். பாஜக தன்னை வெளியாள் என்று விமரிச்சப்பதைக் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார். வெளியாளாக இருந்தால், பத்து ஆண்டுகளாக முதல்வராக எப்படி இருக்க முடியும் என்பது தான் அவர் எழுப்பும் கேள்விதனது முதல் கூட்டத்திலேயே, மம்தா நந்திகிராமை ஒரு மாதிரி நகராக மாற்றுவதாக உறுதியளித்தார், மேலும் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தையும் ஹல்தியாவையும் இணைக்கும் ஒரு பாலத்தையும் அந்த பகுதியில் அமைப்பதாகக் கூறியுள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மம்தா வழிபட்டார். இப்போது புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், வியாழக்கிழமை, சிவராத்திரி தினத்தன்று, கோவிலில் வழிபாடு முடித்து கொல்கத்தா திரும்புவார்.
 
இங்கே மாலையில், அவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும். திங்கட்கிழமை காலை, நந்திகிராமின் பல்வேறு பகுதிகளில் மம்தாவை வெளியாள் என்று கூறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம்.அவற்றில், "நந்திகிராம் மிதினாபூரின் மைந்தனைத் தான் விரும்புகிறது. வெளியாளை அல்ல " என்று எழுதப்பட்டிருந்தது. மறுபுறம், பாஜக இப்போது மம்தாவின் புதிய இந்துத்துவா கொள்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
 
வங்காள கலாச்சாரம்
 
சமீப காலம் வரை டி.எம்.சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து இப்போது பாஜக தலைவராகியுள்ள தினேஷ் திரிவேதி, "மம்தா இப்போது தன்னை ஒரு இந்துவாக மீண்டும் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ள அளவுக்கு நிலைமை உள்ளது. சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே அவர் சண்டி வந்தனம் செய்வதும் பிராமணர் என்று சொல்லிக்கொள்வதும். அவர் சாதாரண மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்பது தெளிவாகிறது. " என்று கூறுகிறார். நந்திகிராம் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுபேந்து அதிகாரி, மம்தா சண்டி வந்தன ஸ்லோகத்தைத் தவறாகப் படித்ததாகவும், வங்காள கலாச்சாரத்தை அவமதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் தனது ஒரு ட்வீட்டில், "முன்னதாக, முதலமைச்சர் ராமரை பலமுறை அவமதித்துள்ளார். சரஸ்வதி மந்திரத்தை தவறாகப் படித்துள்ளார், இப்போது பேரணியில் சண்டிவந்தன ஸ்லோகத்தையும் தவறாகவே கூறியுள்ளார். வங்காள கலாச்சாரத்தை அவர் பலமுறை அவமதித்துள்ளார். வங்காள மக்கள் ஒருபோதும் மாநிலத்தை அவமானப்படுத்துவோரை ஆதரிக்க மாட்டார்கள். " என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
நந்திகிராமின் சாதி சமன்பாடுகளையும், பாஜகவின் இந்து அட்டையையும் அதிகரித்து வருவதை மனதில் கொண்டு, மம்தா இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் தன்னை ஒரு இந்துவாக நிரூபிக்க முயன்றதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.அப்பகுதியின் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.சாஹு கூறுகையில், "இந்த தொகுதி இரு கட்சிகளுக்கும் கௌரவப் பிரச்சனை. எனவே, அனைத்துக் கட்சிகளும் இங்கு சாம- தான- தண்ட- பேதம் என அனைத்து வழிமுறைகளையும் கைப்பற்றத் தவறுவதில்லை." என்று கூறுகிறார்.
 
துர்க்கா பூஜா குழுக்களுக்கு மானியம்
 
சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதாக மம்தா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் புதிதல்ல. 2011 ல் அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து, மம்தா இமாம்களுக்கு மாதாந்திரமாக இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் கொடுப்பனவை அறிவித்தார். அவரது முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் விமர்சனங்களுக்குப் பிறகு, இப்போது இந்த கொடுப்பனவு வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது.இந்தக் காரணத்தினால் தனது இந்தப் பிம்பத்தை உடைக்க வேண்டி, கடந்த ஆண்டிலிருந்து இந்து வாக்காளர்களைக் கவரும் வகையில் நடவடிக்கைகளைத் தொடங்கினார். முதல் முறையாக, இந்து-இந்தி மற்றும் தலித்துகளைக் கவனத்தில் கொண்டு, மாநிலத்தின் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை பிராமண அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000-ம் இலவச வசிப்பிடமும் வழங்குவதாக அறிவித்தார் இந்தி பேசும் வாக்காளர்களைத் தன் வசப்படுத்த, திரிணாமுல் காங்கிரசின் இந்தி செல் அமைக்கப்பட்டது. பல புதிய உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதில் சேர்க்கப்பட்டு, மேற்கு வங்க இந்தி குழுவை விரிவுபடுத்தினர்.
 
இதனுடன், முதன்முறையாக, தலித் அகாடமி உருவாவதாக அறிவித்து, தெருவிலிருந்து அதிகாரத்தின் உச்சத்தை எட்டிய வர்த்தகர் ஒருவர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.மம்தா மாநிலத்தின் சுமார் 37 ஆயிரம் துர்கா பூஜா குழுக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபாய் மானியத்தையும் வழங்கினார். இதனுடன், ஏற்பாட்டுக் குழுக்களின் வரிகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் ஏசி மின்சார ரயில்.. ஐ.சி.எஃப் அதிகாரிகள் தகவல்..!

அமெரிக்கர்களை திருமணம் செய்தால் குடியுரிமை: ஜோ பைடனின் திட்டம் ரத்து..!

முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..!

பெண்கள் புர்கா அணிய தடை.. மீறினால் ரூ.10,000 அபராதம்: சுவிஸ் அரசு உத்தரவு..!

முதல்வருடன் விமானத்தில் செல்ல மறுத்தாரா? ஆளுனரின் மதுரை பயணம் திடீர் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments