Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் யாரையெல்லாம் கொல்கிறார்கள்? அதிரவைக்கும் கள நிலவரம்

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (14:17 IST)
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது, தாங்கள் 1996-இல் இருந்ததை விட மிதவாதிகள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க தாலிபன்கள் முயன்றார்கள்.

மேலை நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர், ஆப்கானிஸ்தானின் அரசுப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாக அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். காபூலுக்குள் தாலிபன்கள் நுழைந்த பிறகு வியக்க வைக்கும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் தாலிபன்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித். அதிலும் மன்னிப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் தாலிபன் தலைவர்களிடமிருந்தும், செய்தித் தொடர்பாளர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளுக்கு நேர் எதிராக உண்மை நிலவரம் இருக்கிறது. இதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

காபூலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் இருந்த அதே இருக்கையில் அதற்கு முன் இருந்து ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தவா கான் மேனேபால் சில வாரங்களுக்கு முன்புதான் கொல்லப்பட்டார். அது அவரது "செயல்களுக்கான தண்டனை" என்று கூறப்பட்டது.

இப்போது ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களும், சமீபத்தில் தப்பி ஓடிய சிலரும் தரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், தாலிபன்கள் தங்களது எதிரிகளை தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கெல்லாம் மன்னிப்பு அளிப்பதாக உறுதியளித்தார்களோ அவர்களையெல்லாம் தேடிக் கொல்வதாகவும் தெரியவருகிறது.

பாட்கிஸ் மாகாணத்தின் பாதுகாப்பு இயக்குநராக இருந்த ஹாஜி முல்லா, பரா மாகாணத்தின் பாதுகாப்பு இயக்குநராக இருந்த குலாம் சாக்கி அக்பரி ஆகிய இரு காவல்துறை உயர் அதிகாரிகளையும் தாலிபன்கள் அண்மையில் கொடூரமாகக் கொன்றது பல தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஹாஜி முல்லாவின் கண்களும் கைகளும் கட்டப்பட்டு மண்டியிட்டபடி சுட்டுக் கொல்லப்படும் காணொளி வெளியாகி இருக்கிறது.

பலர் தாலிபன்களிடம் சிக்காமல் தப்பியோடி விட்டார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்களுடைய சகாக்களை நினைத்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். 2001-ஆம் ஆண்டு தாலிபன்கள் வீழ்த்தப்பட்ட பிறகு காவல்துறையில் சேர்ந்து பயிற்சி பெற்ற ஸாலா ஸாசாய் என்ற பெண் காவலர் இப்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். ஆப்கானிஸ்தானில் இருக்கும் தன்னுடன் பணியாற்றிய மற்றொரு பெண் காவலருடன் தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.

"தாலிபன்கள் அவர்களது அலுவலக தொலைபேசிகளுக்கு அழைத்திருக்கின்றனர். வேலைக்குத் திரும்பும்படியும், முகவரியைத் தரும்படியும் கேட்டிருக்கின்றனர்" என்றார் அவர்.

தாம் இருக்கும் தஜிகிஸ்தானிலும் தாலிபன்களின் ஆபத்தில் இருந்து முற்றிலுமாகத் தப்பி வந்துவிட்டதாகக் கருத முடியாது என்கிறார் சசாய். "ஆப்கானிஸ்தானுக்கு வந்த இஸ்லாமிய வழியில் வாழுமாறு" அவரது தாயின் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் ஸசாய்.

படாக்ஷன் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் அரசுப் படையில் பணியாற்றிய தனது மூன்று சகோதரர்களுடன் தப்பிச் சென்றிருக்கிறார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர். "தாலிபன்கள் தங்களது குடும்பத்தை பணம் கேட்டுத் துன்புறுத்தி வருவதாக" அவர் கூறினார்.

தன்னுடைய சகாக்கள் கொல்லப்பட்ட பிறகு தான் மட்டும் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார் முன்னாள் சிறப்புப் படை வீரர் ஒருவர்.

"தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட அவர்கள் கொலை செய்வதை நிறுத்தவில்லை" என்று அவர் கூறினார். "சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் கந்தஹாரில் சிறப்புப் படையைச் சேர்ந்த 12 பேரையும், ஜலாலாபாத்தில் மூன்று வீரர்களையும் கொன்றனர். அவர்கள் என் நெருங்கிய நண்பர்கள். நான் அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். தாலிபன்கள் அவர்களை வீடுகளை விட்டு வெளியே அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்." என்றார் அவர்.

இந்தக் கொலைகளை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய இயலவில்லை. தாலிபன்களும் பழிவாங்கும் கொலைகளைச் செய்வதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் 2020-இல் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்து கொண்ட பிறகு நடந்த ஏராளமான கொலைகளுக்கு தாலிபன்கள்தான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு தங்களது எதிராளிகளைக் குறிவைத்துத் தேடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தைக் கைப்பற்றிய பின்னர் தாலிபான்கள் ஒன்பது ஹசாரா இன ஆண்களைக் கொன்றதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. மேலும், தாலிபன்கள் போராளிகள் கந்தஹார் மாகாணத்தில் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், அரசுடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பிடித்துச் செல்வதாகவும், சிலரைக் கொன்றதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.

தாலிபன்கள் தம்மைத் தேடி வருவதாகக் பிபிசியிடம் கூறினார் பெயர் குறிப்பிட விரும்பாத மறைந்து வாழும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர்.

"அவர்கள் என் உதவியாளரைப் பிடித்து ஐந்து மணி நேரம் விசாரித்தனர்," என்று அந்த அதிகாரி கூறினார். "அவர்கள் அவரை மிகவும் கொடூரமாக நடத்தினார்கள். அவர்கள் அவரிடம், 'உங்கள் தலைவர் எங்கே?' என்று கேட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் மன்னிக்கிறார்கள் என்றால், ஏன் என்னை தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றனார்கள்?"

தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒவ்வொரு நாளும் தன்னுடைய மறைவிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதாகக் கூறும் அவர், "எல்லையைத் தாண்டிச் செல்வதற்கு பணமில்லை" என்கிறார். பேசும்போது அவரது கண்களில் நீர் வழிகிறது. "தாலிபன்களிடம் நீதி வழங்கும் ஒரு முறையே இல்லை என்பதுதான் பிரச்னையே. அவர்களிடம் நீதிமன்றமும் இல்லை, சிறைகளும் கிடையாது. பிடிபட்டால் கொலைதான்."

பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்கள் மட்டுமே தாங்கள் குறிவைக்கப்படுவதாகக் கூறவில்லை. பொது நிர்வாகப் பணியில் இருந்த அதிகாரிகளும், தாலிபன்களால் அங்கீகரிக்கப்படாத பணிகளைச் செய்தவர்களும்கூட இதேபோன்ற கதைகளைக் கூறுகிறார்கள்.

"தாலிபான்கள் என் காரை எடுத்து, என் காவலர்களை அடித்து, அவர்களின் ஆயுதங்களை எடுத்துச் சென்றனர்," என்று ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயராக இருந்த ஜரிஃபா கஃபாரி கூறினார். இவர் வார்டாக் மாகாணத்தின் தலைநகரான மைதான் ஷாரை சேர்ந்தவர்.

"அவர்கள் என்னைத் தேடிக்கொண்டிருந்தார்கள். நான் எங்கே இருக்கிறேன் என்று என்னிடம் தொடர்பு கொண்டிருந்த எல்லோரையும் அழைத்துக் கேட்டார்கள். என்னைத் தேடி என் கணவரின் பெற்றோர் வீட்டிற்கு கூட சென்றார்கள்," என்று அவர் கூறினார்.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர் தப்பிச் சென்றுவிட்டார். இப்போது ஜெர்மனியில் இருந்து ஒரு வீடியோ அழைப்பின் மூலம் பேசினார்.

"நான் ஒருபோதும் செய்ய விரும்பாத ஒன்றை அவர்கள் என்னைச் செய்யவைத்தார்கள்," என்று அவர் கூறினார். "நான் விரும்பும் ஒரு நாட்டை விட்டு வெளியேற வைத்தனர்."

நிலோபர் அயூபியும் சரியான நேரத்தில் தப்பியவர்களில் ஒருவர். சில வாரங்களுக்கு முன்பு, அவர் தனது ஊழியர்களுடன் காபூலில் உள்ள உயர்வகை பேஷன் மற்றும் ஆபரணங்கள் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். தலிபான்கள் காபூல் நகரத்திற்குள் நுழைந்தபோது, அவர்கள் எல்லாவற்றையும் அகற்ற ஆரம்பித்தனர்.

"நாங்கள் ஜன்னல்களிலிருந்து மாதிரி பொம்மைகளை அகற்றிவிட்டு, ஜன்னல்களை மூடி, கதவைப் பூட்டிவிட்டு தப்பினோம்" என்றார் அயூபி

"நான் எனது ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கினேன், பின்னர் நான் வீட்டிற்குச் சென்று, எனது ஆவணங்களுடன் இரண்டு பைகள் மற்றும் என் குழந்தைகளுக்காக சில பொருட்களை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டேன்" என்றார் அவர்.

அயூபி போலாந்துக்கு தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். பின்னர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தப்பினார்.

"நான் தரையிறங்கியவுடன் என் குடும்பத்திலிருந்து பல அழைப்புகள் வந்திருந்ததைப் பார்த்தேன். அவர்கள் மிகவும் அச்சம் கொண்டிருந்தனர். தலிபான்கள் எங்கள் வீட்டுக்கு வந்ததாகவும், மகளையும் மருமகனையும் திரும்ப அழைக்காவிட்டால் சுட்டுக் கொல்வோம் என்று எச்சரித்ததாகவும் கூறினர்."

தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்தபோது பொதுமன்னிப்பு, கருணை வழங்குவதெல்லாம் அவர்களின் உடன்பாட்டில் இல்லை என்பது கவலையாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள பலரும் தாலிபன்கள் ​மன்னிப்பு வழங்குவார்கள் என்பது குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர். மிதவாதமாகக் காட்டிக் கொள்ளும் அதன் பாணியிலும் சந்தேகம் இருக்கிறது.

வன்முறைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் போன்ற கொடூரங்கள் தலைமையால் தண்டிக்கப்படாவிட்டால், அவர்கள் முன் போன்ற கருணையற்றவர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments