"இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் அடிக்கடி ஆபாசமான விளம்பரம் தோன்றுவது எரிச்சலூட்டுகிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டதுடன் அதில் இந்திய ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை டேக் செய்த இளைஞர் ஒருவருக்கு இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ பக்கம் அளித்த பதில் சமீபத்தில் ட்விட்டரில் வைரலானது.
அதாவது, ஆனந்த் குமார் எனும் அந்த ட்விட்டர் பயன்பாட்டாளருக்கு, "ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் விளம்பரத்தை காண்பிப்பதற்கு நாங்கள் கூகுள் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துகிறோம். எங்களது பயனரின் இணையதள பயன்பாட்டு வரலாற்றை அடிப்படையாக கொண்டே அவர்களுக்கு தகுந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற விளம்பரங்களை தவிர்ப்பதற்கு தயவுசெய்து உங்களது உலாவியின் (புரௌசர்) குக்கி மற்றும் பயன்பாட்டு வரலாற்றை அழித்துவிடுங்கள்" என்று அந்த பதில் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் வைரலானது.
@RailwaySeva
@anandk2012 -க்கான பதிலில்
Irctc uses Googles ad serving tool ADX for serving ads.These ads uses cookies to target the user. Based on user history and browsing behaviour ads are shown. Pl clean and delete all browser cookies and history to avoid such ads .
பிற்பகல் 4:48 - 29 மே, 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
இதைப் பற்றி 10.5ஆ பேர் பேசுகிறார்கள்
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @RailwaySeva
எனவே, தொழில்நுட்ப தொடரின் இந்த வார பதிவில், உண்மையிலேயே சமூக ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகளில் பயன்பாட்டாளர்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கும் அதன் பயன்பாட்டுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளை பார்ப்போம்.
ஒருவர் தனது திறன்பேசியை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது, அவரது ஒரு குறிப்பிட்ட செயலியிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட உலாவியில் பார்க்கும் இணையதளங்களிலோ ஆபாசமான விளம்பரங்கள் வந்தால் அதற்கு காரணம், அந்த குறிப்பிட்ட நபராகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்!
என்ன குழப்பமாக இருக்கிறதா? கையெழுப்பிரதிகள், சுவர்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என்று வளர்ந்து வந்த விளம்பரங்களின் வடிவங்கள் இணைய உலகத்தை அடைந்த பிறகு தனது பயணத்தை நிறுத்திக்கொண்டதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்தீர்களானால், ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை திறந்தவுடன் உடனடியாக முழுப்பக்கத்தையும் அடைத்துக்கொண்டு விளம்பரங்கள் வருமல்லவா, அதற்கு டிஸ்பிளே ஆட்ஸ் என்று பெயர்.
அதாவது, எவ்வித வித்தியாசமுமின்றி அந்த குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே வகையான விளம்பரங்கள் காட்டப்பட்டு வந்தன. தற்காலத்திலும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், ஒருவரது இருப்பிடம், முந்தைய இணையத் தேடல் வரலாறு உள்ளிட்ட செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு விளம்பரத்தை காட்டும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் மேம்பாடு அடைந்துள்ளன. எனவே, ஒருவர் தனது திறன்பேசியிலோ அல்லது கணினியிலோ அல்லது வேறு எந்த தொழில்நுட்பம் கருவியிலோ பார்க்கும் விளம்பரங்களுக்கு அவரது இணையம் சார்ந்த செயல்பாடுகள் காரணமாக இருக்கக்கூடும்.
'என்னுடைய திறன்பேசியில் நான் சில நாட்களுக்கு முன்னரோ அல்லது சில நிமிடங்களுக்கு முன்னரோ பார்த்த ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எப்படி விளம்பரங்கள் வருகின்றன? நான் செய்வதை எப்படி அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்?' என்று மனதிற்குள் நினைக்கிறீர்களா? அதற்கான விடையும் உங்களது திறன்பேசிக்குள்ளேதான் இருக்கிறது.
ஆம், உதாரணமாக நீங்கள் கூகுள் குரோம் உலாவியை பயன்படுத்தி ஒரு இணையதள வணிக தளத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய திறன்பேசி குறித்து தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த குறிப்பிட்ட தளத்தில் மேற்கொள்ளும் செயல்பாடு சார்ந்த தகவல்கள் குக்கியாக உங்களது உலாவியில் சேமிக்கப்படும்.
அதாவது, நீங்கள் அந்த தளத்தில் எவற்றையெல்லாம் பார்த்தீர்கள், எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள், ஏதாவது வாங்கினீர்களா உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த தரவு குக்கிகளாக உங்களது திறன்பேசியில் சேமிக்கப்படும்.
பிறகு, பெரும்பாலான இணையதளங்களை போன்று நீங்கள் பார்வையிட்ட வணிக இணையதளமும் கூகுள் நிறுவனத்தின் விளம்பர சேவையான 'கூகுள் ஆட்ஸ்' சேவையை பயன்படுத்தினால், உங்களது தேடல் சார்ந்த முடிவுகள் கூகுளின் வசம் குக்கிகளின் வாயிலாக உடனுக்குடன் கடத்தப்பட்டு, நீங்கள் அடுத்ததாக பார்க்கும் இணையதளங்கள்/ பயன்படுத்தும் செயலிகள் போன்றவற்றில் அதுசார்ந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
குக்கிகளின் வாயிலாக விளம்பரங்கள் காண்பிக்கப்படுவது ஒருபுறமிருக்க, உங்களுக்கு தெரியாமலேயே, நீங்கள் பயன்படுத்தும் செயலிகள், மென்பொருட்கள், ஏன் உங்களது தொழில்நுட்ப கருவிகளின் மைக்ரோபோன்கள் கூட உங்களது செயல்பாடுகளை கண்காணிப்பதோடு மட்டுமின்றி அதுசார்ந்த தரவை நிர்வகித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டப்படுகிறது.
சரிசெய்வது எப்படி?
தங்களது தனிப்பட்ட செயல்பாடுகளை இணையதள விளம்பரமாக பார்ப்பது குறித்த அச்சத்தை பலரும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இணையதள பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களது அனுமதியின்றி நிறுவனங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது எப்படி என்று சென்னையை சேர்ந்த மின்னணு விளம்பர துறையை சேர்ந்த அஸ்வினிடம் கேட்டோம்.
இலங்கையில் சமூக ஊடகங்களை முடக்குவது தீவிரவாதிகளை ஒடுக்குமா?
"பரிசு கூப்பன், பிறந்த நாள் வாழ்த்து உள்ளிட்ட பெயர்களில் அந்த காலத்தில் பெரும் நிறுவனங்கள் முதல் சந்தையில் புதிதாக நுழைந்த நிறுவனங்கள் வரை பலரும் கையாண்டு வரும் வாடிக்கையாளர் விவர திரட்டுதலே தற்போது புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.
காலத்திற்கேற்றவாறு தங்களது செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மக்கள் பெறுவதை தவிர்த்து இதிலிருந்து தப்பிப்பதற்கு வேறெந்த வழியும் இல்லை. எனினும், நீங்கள் இணையதளங்களை பயன்படுத்தும்போது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கருத்திற்கொள்ளலாம்" என்று அவர் கூறுகிறார்.
குக்கிகள் இயங்குவதை அறவே தவிர்க்கும் பிரத்யேக உலாவிகளை பயன்படுத்தலாம்.
உங்களது இணைய தேடல் வரலாற்றை பதிவு செய்யாத, குக்கிகளை உடனுக்குடன் அழிக்கும் இன்காக்னிட்டோ வடிவில் உலாவியை பயன்படுத்தலாம்.
உலாவியில் 'ஆட் பிளாக்கர்' போன்ற நீட்சிகளை பதிந்து பயன்படுத்தலாம்.
உங்களது திறன்பேசியிலுள்ள எந்தெந்த செயலிகள் எந்தெந்த தரவை சேமிக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் செயலிகளை பயன்படுத்தலாம்.
அதே சூழ்நிலையில், தனது இருப்பிடம் உள்ளிட்டவற்றை காண்பிக்க விரும்பாதவர்கள் விபிஎன் செயலிகளை பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது.
வானொலி, தொலைக்காட்சி, இணையதளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தி தனது விற்பனையை/ சேவையை அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் லட்சக்கணக்கான ரூபாயை செலவிடுகின்றன. எனவே, இனியும் உங்களுக்கு இலவசம் என்ற பெயரில் கிடைக்கும் விடயங்களை அதன் விபரீதம் உணராமல் பயன்படுத்தாதீர்கள். தொழில்நுட்ப உலகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான வேளைகளில் உங்களது தனிப்பட்ட தகவல்களே பணமாக மாற்றப்படுகிறது என்பதை உணருங்கள்