Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ: காரணம் என்ன?

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (18:31 IST)
அமேசான் காட்டுத்தீ குறித்து நாம் கவலைக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையிலுள்ள பிரதான வனப் பகுதியிலும் காட்டுத்தீ பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது.
 
இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல சுற்றுத்தளம் ஈர்க்கின்றமை விசேட அம்சமாகும்.
 
குறிப்பாக அந்த பகுதியின் மலைத்தொடரும், அங்கு நிலவும் குளிர்ச்சியான வானிலையும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
 
எனினும், எல்ல பகுதியிலுள்ள வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
எல்ல வனப் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறித்த பகுதியிலுள்ள சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப் பரப்பு தீக்கிரையாகியுள்ளன.
 
இந்த வனப் பகுதியிலுள்ள இயற்கை மூலிகைகள், பெறுமதிமிக்க மரங்கள், செடிகள், இலங்கைக்கே உரித்தான உயிரினங்கள் என பல அழிந்திருக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
 
குறிப்பாக மனித செயற்பாடுகள் காரணமாகவே இந்த தீ பரவியிருக்கக்கூடும் என சூழலியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
 
எல்ல வனப் பகுதியில் ஏற்பட்டது இயற்கையான காட்டுத்தீயா?
எல்ல வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயானது பெரும்பாலும் இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாக கருத முடியாது என காணி மற்றும் விவசாய அமைப்பின் சுற்றுச்சூழல் ஆலோசகரும், சூழலியலாளருமான சஞ்ஜீவ ஷாமீகர பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
இலங்கையிலுள்ள ஈரவலய காடுகள் பெரும்பாலும் அடர்த்தி தன்மை குறைந்ததாவே காணப்படுகின்ற நிலையில், காட்டுத்தீ இயற்கையாக பரவுவக்கூடிய சாத்தியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.
 
1998ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தம்மால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், கடந்த 8 வருடங்களில் மாத்திரம் காட்டுத்தீ அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கணிப்பிட முடிகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
 
இவ்வாறு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பெரும்பாலும் மனித செயற்பாடுகள் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
பாரிய வர்த்தக திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடன் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பிற்காக காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றது, இலங்கையில் காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில், யானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காகவும் காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றன.
 
உலர் வலயம் மற்றும் ஈரவலயங்களை அண்மித்த பகுதியிலுள்ள மக்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கு (மாடு, ஆடு) உணவுகளை வழங்குவதற்கான ஒரு நடைமுறையாகவும் காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றது.
 
ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே இது அதிகளவில் இடம்பெறுவதாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த காலப் பகுதியில் ஏற்படும் மழை வீழ்ச்சியுடன் புதிய புற்கள் வளர்வதுடன், அது கால்நடைகளுக்கு சிறந்த உணவாக்கும் வகையில், காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
காடுகளிலுள்ள சிறந்த மூலிகை மற்றும் இயற்கை வளப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காகவும் காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றன.
 
மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றன.
 
விநோத செயற்பாடுகளுக்காகவும் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன.
 
குறிப்பாக சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் காட்டு யானைகளின் பிரவேசத்தை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவிலான சந்தர்ப்பங்களில் காடுகளுக்கு தீ வைக்கப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
''எல்ல பகுதியை எடுத்துக் கொண்டால், அதிகளவில் விநோத செயற்பாடுகளுக்காவே காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். குறிப்பாக இலங்கையிலுள்ள இயற்கை காடுகளில் காட்டுத்தீ ஏற்படாது. அமேசான் காட்டில் பாரியளவில் காட்டுத்தீ ஏற்பட்டாலும், இலங்கையில் அவ்வாறான தீ பரவாது. பைனஸ் மரங்கள், எகேசியா மரங்கள், தேயிலை செடிகள் மற்றும் புற்தரைகள் போன்றவற்றிற்கே இலங்கையில் அதிகளவில் தீ வைக்கப்படுகின்றது.
 
எல்ல பகுதி என்பது ஊவா மாகாணத்திலுள்ள மரங்கள் மற்றும் புற்தரைகளை கொண்ட ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளதாலேயே இந்த தீங்கு ஏற்பட்டுள்ளது. இது சுற்றுலாத்துறை மாத்திரமன்றி பல்வேறு துறைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என காணி மற்றும் விவசாய அமைப்பின் சுற்றுச்சூழல் ஆலோசகரும், சூழலியலாளருமான சஞ்ஜீவ ஷாமீகர குறிப்பிடுகின்றார்.
 
எல்ல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
காடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என எல்ல காவல்துறையினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments