Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக விலங்குகள் நல தினம்: டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி?

Advertiesment
World Animal Welfare Day
, செவ்வாய், 4 அக்டோபர் 2022 (12:58 IST)
விண் எரிகல்லின் தாக்கம் பூமியில் பேரழிவை ஏற்படுத்தியது, பெரும்பாலான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இறந்து கொண்டிருந்தன.

ஆனால் விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரு சில பாம்பு இனங்கள் எரிகல் தாக்கிய பிறகான உலகில், நிலத்தடியில் ஒளிந்து கொண்டு, நீண்ட நாட்களுக்கு உணவு இல்லாமல் தழைத்து வளர முடிந்தது.

அந்த அளவுக்கு அதிக எதிர்வினை ஆற்றல் கொண்ட ஊர்வன, பின்னர் உலகம் முழுவதும் பரவி, இன்று அறியப்படும் அளவுக்கு 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட இனங்களாக பரிணமித்தன.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி மீது ஏற்பட்ட விண்கல் தாக்குதலில் டைனோசர்கள் இறந்துவிட்டன. அந்த தாக்குதல் பூகம்பங்கள், சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரழிவுகளைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து ஒரு தசாப்த காலத்துக்கு சாம்பல் மேகங்கள் பூமி மீது சூரிய ஒளி வீச விடாமல் இருள் சூழ்ந்தது.

தோராயமாக 76 சதவீத தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணாமல் போயின. சில பாலூட்டிகள், பறவைகள், தவளைகள் மற்றும் மீன்களைப் போலவே, பாம்புகள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டன.சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, டைனோசர்களை அழித்த சிறுகோள் (ஆஸ்டிராய்டு) தாக்குதலுக்கு பாம்புகள் தங்கள் வெற்றிக்கு கடன்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

"உணவுச் சங்கிலிகள் சீர்குலைந்த அச்சூழலில், பாம்புகளால் உயிர்வாழவும் வளரவும் முடிந்தது, மேலும் அவை புதிய கண்டங்களை காலனித்துவப்படுத்தி அவற்றின் சூழலுடன் புதிய வழிகளில் தொடர்பு கொள்ள முடிந்தது" என பாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்ட முன்னணி ஆராய்ச்சியாளர் முனைவர் கேத்தரின் க்ளீன் கூறினார்.

"அந்த விண்கல் தாக்கம் இல்லாமல், பாம்புகள் இன்று இருக்கும் நிலையை எட்டி இருக்க வாய்ப்பில்லை."
World Animal Welfare Day


விண்கல் (ஆஸ்ட்ராய்டு) மெக்சிகோவில் மோதிய போது, பாம்புகள் இன்று நமக்கு நன்கு தெரிந்தவை போல இருந்தன: இரையை விழுங்குவதற்கு நீண்ட தாடைகளுடன் கால் இல்லாமல் இருந்தன.

உணவுப் பற்றாக்குறையால், சுமார் ஓராண்டு காலம் வரை உணவு இல்லாமல் நிர்வகிக்கும் திறன் மற்றும் பேரழிவைத் தொடர்ந்து இருளில் வேட்டையாடும் திறன் அவைகள் உயிர்வாழ்வதற்கு உதவியாக இருந்தன.

அப்போது வாழ்ந்து வந்த பாம்பு இனங்கள் நிலத்தடியிலும், வனப்பகுதியிலும், நன்னீரிலும் வாழ்ந்து வந்தன.

மற்ற விலங்குகளிடமிருந்து பெரிய போட்டிகள் இல்லாத போது, அவைகள் பல்வேறு பரிணாம வளர்ச்சிப் பாதைகளில் மற்றும் உலகெங்கிலும் தழைத்து வளர முடிந்தது, அப்படித் தான் பாம்புகள் முதல்முறையாக ஆசிய கண்டத்தை ஆக்கிரமித்தன.

காலப்போக்கில், பாம்புகள் பெரியதாகவும், பரவலாகவும் வளரத் தொடங்கின. புதிய வாழ்விடங்களையும், புதிய இரையையும் வேட்டையாடத் தொடங்கின. 10 மீட்டர் நீளமுள்ள மாபெரும் கடல் பாம்புகள் உட்பட புதிய இன பாம்புகள் தோன்றின.


'நேச்சர் கம்யூனிகேஷன்' என்கிற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, அனைத்து உயிருள்ள பாம்புகளும் டைனோசரைக் கொன்ற விண்கல் தாக்கத்திலிருந்து தப்பிய உயிரினங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

நவீன பாம்பு இனங்களான மர பாம்புகள், கடல் பாம்புகள், விஷ வைப்பர்கள், நாகப் பாம்புகள், போவாஸ், மலைப்பாம்புகள் போன்ற பெரிய பாம்புகள் இந்த விண்கல் அழிவுக்குப் பிறகு தான் தோன்றின.

வாழ்ந்து கொண்டிருந்த மொத்த உயிரினங்களில், பாதி இனங்கள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் இறப்பது - பூமி கிரகத்தின் வரலாற்றில் வெகு சில முறை மட்டுமே நிகழ்ந்துள்ளன.

பேரழிவுகளுக்குப் பிந்தைய காலகட்டங்களில், பரிணாம வளர்ச்சி என்பது "மிகவும் பரந்த சோதனை மற்றும் புதுமையானதாக இருந்தன" என பாத் பல்கலைக்கழகத்தில் மில்னர் பரிணாம மையத்தைச் சேர்ந்த முனைவர் நிக் லாங்ரிச் கூறுகிறார்.

பூமி வெப்பமான காலநிலையிலிருந்து, குளிர்ச்சியான காலநிலைக்கு மாறிக் கொண்டிருந்த போது, பாம்புகளின் பரிணாம வளர்ச்சியின் இரண்டாவது வெடிப்புக்கான ஆதாரங்களையும் இந்த ஆய்வு கண்டறிந்தது

பாம்புகள் பூமியில் நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமான உயிரினங்களாக உள்ளன. அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் பாம்புகளைக் காணலாம். அவைகள் கடல் பகுதிகள் தொடங்கி வறண்ட பாலைவனங்கள் வரை பெரும்பாலான சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழ்கின்றன.

நிலத்தடியில் வாழும் பாம்புகள் தொடங்கி மரங்களின் உச்சியில் வாழும் பாம்புகள் வரை பல வகையான பாம்பு இனங்கள் இருக்கின்றன. அவை சில சென்டிமீட்டரிலிருந்து ஆறு மீட்டருக்கு மேல் வளரக்கூடியவைகள் வரை உள்ளன.

சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு பாம்புகள் மிக முக்கியமானவை. இரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாம்புகள் மனிதர்களுக்கு உதவுகின்றன. மனிதர்களுடனான மோதல்கள் காரணமாக, பல உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.

(பிபிசி தமிழில் செப்டெம்பர் 2021இல் வெளியான கட்டுரை உலக விலங்குகள் நல நாளான இன்று மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியதால் டார்ச்சர்: சென்னை ஐ.டி. ஊழியர் தற்கொலை!