Publish Date: Thu, 30 Jul 2026 (11:32 IST)
Updated Date: Thu, 30 Jul 2026 (11:34 IST)
நடிகை மந்த்ரா பிரியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, 90-களின் காலகட்டத்தில் இளைஞர்களின் நெஞ்சக் கதவுகளைத் தட்டிய முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். விஜய்யுடன் நடித்த லவ் டுடே , அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு , கார்த்திக்குடன் நடித்த கண்ணன் வருவான் போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தமக்கென ஒரு தனி இடத்தை அவர் பிடித்தார். கமர்ஷியல் கதாநாயகியாக மட்டுமின்றி, தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய மந்த்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்த பல சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனும் இயக்குநருமான தனுஷ் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனுஷும் தாமும் சிறுவயதில் ஒரே வகுப்பில் படித்த கிளாஸ்மேட்ஸ் என்ற உண்மையை அவர் கூறியுள்ளார். ஐந்தாம் வகுப்பு வரை தானும் தனுஷும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்ததாகவும் கூறினார்.
குறிப்பாக, பள்ளியில் தாம் குரூப் லீடராகப் பொறுப்பு வகித்ததாகவும், தம்முடைய குரூப்பில்தான் தனுஷ் இடம்பெற்றிருந்தார் என்றும் மந்த்ரா தெரிவித்துள்ளார். பள்ளிப் பருவத்தில் குரூப் லீடராக இருந்த அதிகாரத்தில் தாம் தனுஷை பலமுறை திட்டியிருப்பதாகவும், சில சமயங்களில் தனுஷ் தம்மிடம் அடி கூட வாங்கியிருக்கிறார் என்றும் சிரித்தபடியே மந்த்ரா பகிர்ந்துள்ளார். பள்ளி காலத்தில் தனுஷுக்கும் தனக்கும் சுத்தமாக செட்டே ஆகாது என்றும், இருவரும் எப்போதும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சிறுவயதில் தாம் பார்த்த தனுஷின் அமைதியான சுபாவத்திற்கும், இன்று திரைத்துறையில் உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் நடிகர் தனுஷிற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக மந்த்ரா வியப்புடன் குறிப்பிட்டார். தனுஷ் எதிர்காலத்தில் திரைத்துறையில் நுழைந்து ஒரு மாபெரும் கதாநாயகனாகவும், திறமையான இயக்குநராகவும் உருவெடுத்து இவ்வளவு பெரிய சாதனைகளைப் படைப்பான் என்று தாம் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
....
மேலும் படிக்க