இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் கெனூரன் முத்துசாமி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்கா 500 ரன்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியை தோற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியை இழக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் இந்திய வீரர்களின் செயலில் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் “இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டுவரும் என நம்புகிறேன். ஆனால் களத்தில் நம் வீரர்களின் உடல்மொழியைப் பார்த்தால் எதுவும் சரியாக இல்லை” எனக் கூறியுள்ளார்.