இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது டீ 20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 3-1 என்ற கணக்கிலும் தொடரை இழந்துள்ளது.
இதையடுத்து 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற இருக்க்கிறது. இதுவரை இந்திய மண்ணில் இரு நாடுகளுக்கிடையிலான டீ 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது இல்லை.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்றது போல டீ 20 போட்டிகளை வெல்ல முடியாது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் விருப்பமான ஆட்டமே இருபது ஓவர் போட்டிகள்தான். அணியில் இருக்கும் 11 பேருமே அதிரடியாக ஆடக்கூடிய செயல்திறன் கொண்டவர்கள். மேலும் இருபது ஓவர் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவை விட வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான மற்றும் அதிக வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது.
இருமுறை இருபது ஓவர் உலகக்கோப்பைப் பட்டம் வென்றுள்ள அணியை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. அந்த அணியின் முக்கிய தூண்களான கைல், பிராவோ, டேரன் சாமி ஆகியோர் அணியில் இல்லை என்றாலும் கைரன் பொல்லார்டு, ஷெய் ஹோப், ஹைட்மைர் மற்றும் சேசன் ஹோல்டர் ஆகியோர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை கேப்டன் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அம்பாத்தி ராயுடு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்றவர்கள் இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தோனிக்குப் பதிலாக ரிஷப் பாண்ட் இந்த போட்டியில் களமிறங்க இருக்கிறார். தோனியின் நீக்கத்தை அவர் நியாயப் படுத்தவேண்டும்.
பவுலிங்கில் பூம்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கலில் அஹமது அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்க வைக்க முயல்கிறார்.
பலமான இரு அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.