காஷ்மீரின் பஹல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்திய ராணுவம் பதிலடிக் கொடுத்தது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ராணுவங்களும் எல்லைப் பகுதிகளில் மோதிக் கொண்டன. இதனால் கடந்த வாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவியது.
இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் இவ்வார இறுதியில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்குவதாக சொல்லப்படுகிறது. ஸ்டார்க் போன்ற ஆஸி வீரர்களும் இங்கிலாந்து வீரர்களும் இப்படித் தயங்குவதாக சொல்லப்படுகிறது. அப்படி விளையாடாத வீரர்களை அணி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும் விருப்பமிருப்பவர்கள் மட்டும் விளையாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.