டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்த நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட் செய்த போது ஒரு பவுன்சர் அவரின் தோள்பட்டையைத் தாக்கியதால் வலியால் அவதிப்பட்டார். அவரை இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் பரிசோதித்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து ஆடமுடியாத சூழல் ஏற்பட்ட போது அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பயிற்சியில் ஈடுபடும் போது அவருக்கு வலி ஏற்படாமல் இருக்குமாயின் அவர் விளையாடுவார் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் அவர் விளையாட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பும்ராவின் மனைவியும் வர்ணனையாளருமான சஞ்சனா “பும்ரா டாஸ் போடுவதைப் பார்க்க என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை” என்று ஒரு பதிவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அணிக்கு துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார் என்பதால் எப்படி பும்ரா கேப்டனாக முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.