மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
கமல்ஹாசன் கூறுகையில், "விஜய்யின் பொதுக்கூட்டங்களில் கூடும் மக்கள் கூட்டம், நிச்சயமாக வாக்குகளாக மாறும் என்று கூற முடியாது. எனக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்த தலைவருக்கும் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. மக்கள் அரசியல் மாற்றத்திற்காக வெளியே வர வேண்டும். வாக்களிக்கும் நாளில் அதை ஒரு பண்டிகை போலக் கொண்டாடி, அடுத்த ஐந்து ஆண்டுகளை நல்லாட்சிக்கு உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆலோசனை கூறிய கமல்ஹாசன், "நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்" என்று கூறினார். இந்த அறிவுரை விஜய்க்கு மட்டுமல்ல, அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்று அவர் தெரிவித்தார்.