தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் முக்கியமான திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற புனிதத்தலங்களுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் இத்தலம், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெருமிதம் பெற்ற தலமாகும். ஆழ்வார்கள் இப்பெருமானை அன்புடன் "குடந்தைக் கிடந்தான்" என பாடியுள்ளனர். இங்கே "ஆராவமுதன்" என அழைக்கப்படும் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
இந்த கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா, பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா மே 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சிறப்பு அலங்காரங்களுடன் பெருமாள் வீதியுலா காட்சி அளித்தார்.
விழாவின் சிறப்பம்சமாக இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் 3-வது பெரிய தேர் எனும் பெருமையை கொண்ட தேரில், சாரங்கபாணி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியுடன் எழுந்தருளினார். அழகான அலங்காரத்தில் தேரில் வலம் வந்த பெருமானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் முழக்கங்களுடன் தேரை இழுத்தனர்.
தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.