தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் எண்ணெய் குளியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் தீபாவளி தினத்தில் செய்யப்படுவது சிறப்புக்கள் வாய்ந்தது.
தீபாவளி அன்று விடியற் காலையில் கங்கா ஸ்நானம் எனும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது, தொடங்கி லட்சுமி பூஜை செய்தும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை உண்டும் கொண்டாடி மகிழ்வது வழக்கத்தில் உள்ளது.
தீபாவளி நாளில் அதிகாலை அதாவது 3 முதல் 5.30 மணிக்குள் கங்கா ஸ்தானம் செய்து, அதாவது எண்ணெய் குளியல் செய்வதால் கங்கையில் நீராடிய பலன்கள் கிடைக்கும். நல்லெண்ணெய்யை தலையிலும் உடலிலும் தேய்த்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு பிறகு தான் சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். 6 மணிக்கு பிறகு குளிப்பதாக இருந்தால் வெந்நீரை பயன்படுத்தக்கூடாது என்றும், குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கங்கா ஸ்தானம் செய்வதற்கு வைத்துள்ள எண்ணெய்யில் மகா லட்சுமியும், சீயக்காயில் சரஸ்வதி தேவியும், வெந்நீரில் கங்கா தேவி குடிகொண்டிருப்பதாக ஐதீகம். எனவேதான் நாமும் அந்த நேரத்தில் நாம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் விடியற்காலையில் அனைவரும் எழுந்து ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய், சீயக்காய் வைத்து, வீட்டில் உள்ள பெரியவர் மற்றவர்களின் தலையில் எண்ணெய்யை வைத்துவிடுவார்கள். பிறகு அனைவரும் வெந்நீரில் குளித்து வருவதைதான் கங்கா ஸ்நானம் என்று கூறுகிறோம். இதனால் தீபாவளி நாளில் கங்கா ஸ்தானம் மிகவும் சிறப்புக்கள் வாய்ந்தது.