திமுகவின் கோட்டையாக விளங்கும் தென் சென்னை மக்களவைத் தொகுதியை இந்த முறை தட்டித் தூக்கப் போவது யார்? தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் முன்னாள் ஆளுநர் தமிழிசை தென் சென்னை தொகுதியில் ஜெயிப்பாரா? தென் சென்னை கள நிலவரத்தை விரிவாக பார்க்கலாம்..
தென் சென்னை தொகுதி உருவாக்கப்பட்டு 51 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2008ல் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது. தென் சென்னை மக்களவை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் இருக்கும் சட்டமன்ற தொகுதி எது என்றால், அது தென் சென்னையில் இருக்கும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தான்.
இதனாலே தென் சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த தொகுதியில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அதற்கேற்ப வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர்.
பல்வேறு மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலாப் பகுதிகள், ஐஐடி உள்ளிட்ட சிறந்த கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் போன்றவை இருப்பதால், தென் சென்னை முழுவதும் பெரிய கட்டடங்கள் மற்றும் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளாகவே காணப்படும்.
இன்னும் சொல்லப்போனால் டி,நகர் பஜார், கோயாம்பேடு போன்றவைகளையும் தென் சென்னை உள்ளடக்கியுள்ளது. மேலும், தென் சென்னையில் மக்களவை தொகுதியில் உள்ள வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசித்து வந்தாலும், பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.
இதுவரை 17 முறை தேர்தலை சந்தித்துள்ள தென் சென்னை மக்களவை தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்று, திமுகதான் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், மத்திய சென்னையை போல் தென் சென்னையும் திமுகவின் கோட்டை என்றும் கூறலாம்.
அதன்படி, தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதில், அதிகபட்சமாக இந்த தொகுதியில் 4 முறை மக்களவை உறுப்பினராக திமுக எம்பியும் பொருளாளருமான டி.ஆர்.பாலு தேர்வாகியுள்ளார்.
2019 மக்களவை தேர்தலில், தென் சென்னை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார். தமிழச்சி தங்கப்பாண்டியன் 5,66,504 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜே. ஜெயவர்த்தன் 3,03,146 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். எனவே, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 2,63,358 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளும் திமுக கூட்டணி வசமே உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுகவினர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் தென்சென்னை திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்த்தனன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதால், அத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக செயல்பட்ட தமிழிசை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதுவரையில் போட்டியிட்ட 2 சட்டமன்றம் மற்றும் 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே அவர் சந்தித்துள்ளார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி (2006), வட சென்னை நாடாளுமன்ற தொகுதி (2009), வேளச்சேரி சட்டமன்ற தொகுதி (2011) தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி (2019) ஆகியவற்றில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தற்போது தமிழிசையின் இமேஜ் கூடியுள்ளதால் வருகிற தேர்தல் திமுகவுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தலில் தமிழிசை குறிப்பிட்ட வாக்குகளை பெறுவார் என்பதால், திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியனுக்கும், அதிமுகவின் ஜெயவர்த்தனனுக்கும் வெற்றி வாய்ப்பு எளிதாக கிடைக்காது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
சிட்டிங் எம்பி ஆன தமிழச்சி தங்கபாண்டியன், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதத்தின்போது தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை என்று தொகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இருப்பினும் திமுக வேட்பாளர் என்ற அடையாளம் அவருக்கு பக்கபலமாக உள்ளது. தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக கடந்த தேர்தலைப் போல் வருகிற தேர்தலில் அவருடைய வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன ஆவார். அவர் ஏற்கனவே தென் சென்னை எம்பி ஆக இருந்துள்ளார். தொகுதி மக்களிடையே நன்கு அறியப்பட்ட ஜெயவர்த்தன், திமுகவின் அதிருப்தி வாக்குகளை தன்வசமாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை தென் சென்னை தொகுதியில் ஸ்டார் வேட்பாளரான தமிழிசை களமிறங்கி உள்ளார். இதனால் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக வசமிடம் இருக்கும் தென் சென்னை, மீண்டும் திமுகவுக்கே கிடைக்குமா? அல்லது அதிமுக, பாஜகவிடம் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..