சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தோல்வி அடைவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு உள்ள திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும் என்றார்.
யாரையும் மதிக்கத் தெரியாதவர், யாராக இருந்தாலும் தனது அதிகார பலத்தை வைத்து முடக்கி விடலாம் என நினைக்கும் தொல் திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
10 ஆண்டுகால ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 76 அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றும் அதில் 11 அமைச்சர்கள் பெண்கள் இருப்பதாகவும், 12 அமைச்சர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், 27 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இது சமூக நீதி இல்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
எத்தனை நாளைக்கு பொய் பேசிக்கொண்டு இங்கு சுற்றிக் கொண்டிருப்பீர்கள், நீங்கள் வளர்வதற்காக ஒரு கட்சி, அதற்காக உங்கள் தொண்டர்களை பலிகடா ஆக்குவீர்களா என்று திருமாவளவனை பார்த்து அண்ணாமலை கேள்வி எழுப்பினர்.
மேலும் திருமாவளவன் கடவுளுக்கும் மக்களுக்கும் எதிராக பேசுவதாகவும், விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அப்புறப்படுத்தப்படும் என்றும் அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.