ராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடரில் 31 மலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வடிவேலு படத்தில் கிணத்த காணோம் என்று நகைச்சுவைக் காட்சி வருவது போல ராஜஸ்தானில் மலையே காணாமல் போன நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைத் தொடரில் 31 மலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய கனிம வளத்துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தடுப்புச் சுவராக இருக்கும் மலைகளை சுரங்கப் பணிகளுக்காக அழிப்பது வேதனை அளிப்பதாகவும், காற்று மாசு அதிகரிக்க மலைகள் அழிக்கப்படுவது தான் முக்கிய காரணம் என கூறினர்.
மேலும் மலைப்பகுதிகளை பாதுகாக்க தவறிய ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் அனுமரைப் போல் மாறி மலைகளை பேர்த்தெடுத்து செல்வதாக நீதிமன்றம் கூறியது. மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும் இனி ஆரவள்ளி மலைப்பகுதிகள் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம்.