ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் நேற்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 28 பேர் பலியாகினர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் தற்போது டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு இருப்பதாகவும், இன்றிரவு அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பெஹல்காம் தாக்குதல் நடந்த போது அங்கு 35 தமிழர்கள் இருந்ததாகவும், அவர்கள் தங்களுடைய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு பத்திரமாக திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், 35 தமிழர்களும் இன்று இரவு சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாக்குதலில் பலியான 26 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தர் பிரதேசம், ஹரியானா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதே போல், இரண்டு வெளிநாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.