டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 25-ம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
டில்லி அரசின் 2021- 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் ஊழல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை கைது செய்தனர்.
இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை.
இதை அடுத்து கடந்த 21 ஆம் தேதி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், வீடு முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகிற 25ஆம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.