பீகார் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முழுவதுமாக எண்ணி முடிக்க இரவு ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான ஜேடியு 127 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆர்ஜேடி 106 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பீகாரில் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கும்.
தற்போதைய நிலவரப்படி 4 கோடிக்கும் அதிகமான ஓட்டுகளில் 25 சதவீதம் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மொத்த வாக்குகளையும் எண்ணும் பணி முடிய இரவு வரை ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதை பாஜகவினர் இப்போதே கொண்டாடி வருகின்றனர். எனினும் மீதமுள்ள 75 சதவீத வாக்குகளில் முடிவுகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.