இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகார அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பு குறித்த பல விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், பல நாடுகளில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பு மற்றும் திருமணங்களை சில நாட்டு அரசுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. தன்பாலின் காதல் மற்றும் திருமணத் தடை சட்டங்களை மட்டும் சில ஆண்டுகள் முன்னதாக இந்திய அரசு நீக்கியது. என்றாலும் தன்பாலின திருமணங்கள் சட்டரீதியாக இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இந்தியாவில் பலர் தன்பாலின திருமணங்களை செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு “கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்பு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்தி பார்க்க முடியாது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காததால் எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.