விண்வெளி சார்ந்த திட்டங்களில் இந்தியா முன்னேற்றத்தை அடைய தனியாருடன் கை கோர்க்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் 2’ விணகலம் உலகம் முழுவதும் பரவலான கவனத்தை பெற்ற நிலையில், கடைசி சில நிமிடங்களில் லேண்டர் சரியாக தரை இறங்காததால் அந்த திட்டம் தோல்வி அடைந்தது. ஆனால் துவண்டு விடாத இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பும் முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதனால் விண்வெளித்துறையில் தனியாருக்கு இடமளிப்பது நல்ல முன்னேற்றங்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியிலோ அல்லது அதற்கு பிறகான விண்வெளி திட்டங்களிலோ தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸுடன் இணைந்து நாசா சாதித்தது போல இஸ்ரோவும் விண்வெளியில் பல சாதனைகளை படைக்க இந்த முடிவு உதவும் என நம்பப்படுகிறது.