ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலங்களுக்கு வெளியேறுவதால் மாநில எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் புலம்பெயர்ந்து வேலை பார்த்து வரும் மக்கள் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவிக்கின்றனர். தங்கும் இடம், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். பேருந்து, ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் கால்நடையாகவே சொந்த மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் மக்கள் மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்வதை தடுக்க மாநில எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.