இந்தியா முழுவதும் மக்கள் ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வரும் நிலையில் அதன் ஒரிஜினல் ஜெராக்ஸை எங்கும் தர வேண்டாம் என மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்தியா முழுவதும் குடிமக்களுக்கு ஆதார் கார்டு அவசியமாக்கப்பட்ட நிலையில் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளிலும் ஆதார் கார்டு உறுதிப்படுத்துதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மத்திய டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எங்கும், எதற்கும் ஆதார் ஒரிஜினலின் நகலை தர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதை முறைகேடாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சான்றுக்கு ஆதார் ஜெராக்ஸ் தர வேண்டிய தேவை எழுந்தால் ஆதார் இணையதளத்தில் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்து அதை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்டு ஆதாரில் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காட்டும். எனவே ஆதார் கார்டை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு தடுக்கப்படும். மேலும் பொது இடங்களில் உள்ள கணினிகளில் ஆதார் தரவிறக்கம் செய்தல் போன்றவற்றையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.