மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சர்ச்சையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி, ஆளும் திமுக கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மாநிலங்களவையில் திருச்சி சிவாவும், மக்களவையில் டி.ஆர். பாலுவும் நோட்டீஸ் அளித்தனர்.
தமிழ்நாட்டில் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த பிரச்சினை, வகுப்புவாத பதற்றத்தை தூண்டியிருக்கிறது" என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்ததால், காவல்துறை அனுமதி மறுத்தது. அரசு மேல்முறையீடு தள்ளுபடியான நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உடனடியாக தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதால், திருப்பரங்குன்றம் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக முறையிடவுள்ளது. இந்த சூழலை தேசிய அளவில் விவாதிக்கவே திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.