Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தியின் திடீர் மனமாற்றம்; கடுப்பான நேதாஜி! – காங்கிரஸில் இருந்து வெளியேறியது ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (11:42 IST)
இன்று சுபாஸ் சந்திரபோஸின் 126வது பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் நிலையில் வரலாற்றில் அவர் குறித்த சுவையான சில சம்பவங்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தனிப்பெரும் நாயகனாய் என்றென்றும் நிலைத்து நிற்பவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். முதலில் சுதந்திர போராட்டத்திற்காக காங்கிரஸில் இணைந்து பணியாற்றியவர் அங்கு காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாடால் விலகி, தனி ஆளாக ஆசாத் ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராடினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும், காந்திக்கும் இடையேயான முரண்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை. வங்கத்தின் காங்கிரஸ் தலைவரான சி.ஆர்.தாஸின் வழிகாட்டுதலின்படி காங்கிரஸில் இணைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேச விடுதலையை தனது உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டார்.

ஆனால் காந்தியின் மிதவாத கருத்துகளில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. இருந்து இரண்டு முறை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பாகவே செயல்பட்டார். நாட்டின் விடுதலைக்கு அமைதி வழி மட்டும் போதாது, ஆயுதமேந்திய போராட்டம் தேவை என சுபாஷ் சந்திரபோஸ் தொடர்ந்து தனது கருத்தை கூறி வந்தார்.

1937க்கு பிறகு காங்கிரஸின் செயல்பாடுகளில் ஒரு சோர்வு தொற்றியது. அப்போது காங்கிரஸை புத்துணர்வுடன் செயல்பட செய்ய விரும்பிய காந்தி 1938ல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அடுத்த காங்கிரஸ் தலைவராக நேதாஜியைதான் பரிந்துரைத்தார். ஆனால் ஒரு ஆண்டு காலத்திற்கும் நேதாஜியின் தீவிரவாத சிந்தனைகளால் காந்தியின் மனம் மாற தொடங்கியது.

இதனால் 1939ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸ் தலைவராவதை தான் விரும்பவில்லை என தெரிவித்தார். இது சுபாஷ் சந்திரபோஸை கோபம் கொள்ள செய்தது. காங்கிரஸால் ஒருபோதும் நாட்டுக்கு விடுதலை பெற இயலாது என கருதிய அவர் தனி ஒருவராய் தாய்நாட்டை விட்டு சென்று ஆசாத் ராணுவத்தை உருவாக்கினார்.

நேதாஜி எழுதி பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட “இந்தியப்போர்” என்ற புத்தகத்தில் காந்தி குறித்து நேதாஜி “இந்தியர்களை கிரகிக்கும் ஒரு அபூர்வசக்தி காந்திஜியிடம் இருக்கிறது. வேறொரு நாட்டில் அவர் பிறந்திருந்தால் அந்நாட்டிற்கு அவர் முற்றும் தகுதியற்றவராகவே இருந்திருப்பார். அங்கு அவரது சாத்வீக கோட்பாடுகளுக்கு ஆபத்து உண்டாகியிருக்கும் அல்லது அவர் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பார். ஆனால் இந்தியாவில் வேறுவிதமாக அவரது எளிய வாழ்க்கை, மரக்கறி உணவு, கோவணாண்டி உடை அவரை மகாத்மாக்களில் ஒருவராக்கி மக்களின் மனதில் பதிய செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தியுடன் நேரடியாக இவ்வாறான மோதலை நிகழ்த்திய சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேருவுடன் ஒரு நட்பார்ந்த சூழலில் இருந்தார். நேருவும் காந்திய வழியில் அமைதி விரும்பியாக இருந்த போதிலும், ஆசாத் ராணுவத்தின் ஒரு பிரிவிற்கு நேருவின் பெயரை சுபாஷ் சந்திரபோஸ் வைத்தார் என்பது வரலாற்று தகவல். அதுபோல நேதாஜியின் மரணம் குறித்து அறிந்த நேரு கண்ணீர் விட்டு அழுததுடன், அவரை தன்னுடைய இளைய சகோதரராக பாவித்தார் என வரலாற்று செய்தி உள்ளது. அதுபோல இந்திய தேசிய ராணுவம் தொடர்பாக தில்லி செங்கோட்டை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவர்களுக்காக ஜவஹர்லால் நேரு ஆஜராகி வாதாடியதும் குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments