சீட்டு மோசடி வழக்கு குறித்து மேற்குவங்கம் வந்த சிபிஐ அதிகாரிகள் ஐவர் மேற்கு வங்க காவல்துறை தலைவரை கைது செய்ய முயன்றனர். சிபிஐயின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதிரடியாக ஐந்து சிபிஐ அதிகாரிகளை கைது செய்ததோடு சிபிஐக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த தர்ணா போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிஐ மூலம் மாநிலத்தின் தன்னாட்சியை மத்திய அரசு நசுக்க முயல்வதாகவும் இந்த விவகாரத்தில் சமரசம் செய்ய சிலர் முயற்சிப்பதாகவும், சமரசமாக செல்வதை விட உயிரை இழக்கவும் தயாராக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சி நிர்வாகிகளை விசாரணை என்ற பெயரில் வஞ்சித்தபோது கூட வீதிக்கு வந்து போராடியதில்லை என்றும் ஆனால் மேற்குவங்க காவல்துறை தலைவரை குறிவைத்துள்ளதால் தனது கோபம் அதிகமானதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.