மும்பையில் பல ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் கால பாலம் ஒன்றை இரண்டே நாட்களில் அகற்றியுள்ளனர்.
சமீபத்தில் குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பழமையான, ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள் குறித்து கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் அகற்றப்பட்டுள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே உள்ள கர்னக் மேம்பாலம் பிரிட்டிஷ் காலத்தில் 1866-67 ல் கட்டப்பட்டது. இந்த பாலம் பல காலமாக பொது போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
ஆனால் பாலத்தின் தரம் குறித்த ஐயத்தால் கடந்த 2014ல் இந்த பாலத்தின் மீதான போக்குவரத்து குறைக்கப்பட்டிருந்த நிலையில் 2018ம் ஆண்டு மும்பை ஐஐடி நிபுணர் குழு இந்த பாலம் பாதுகாப்பற்றது என சான்றளித்து இருந்தது.
அதை தொடர்ந்து பாலத்தை அகற்ற திட்டமிட்ட ரயில்வே அதற்கான பணிகளை நவம்பர் 19ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கியது. சுமார் 500 ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி நவம்பர் 21ம் தேதி பாலத்தை அகற்றும் பணியை முடித்துள்ளனர். சுமார் 450 டன் இரும்பு கம்பிகள் கிரேன் மூலமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்த 19 மாதங்களுக்கு அப்பகுதியில் ரூ.49 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.