சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரை 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள பாரம்பரிய கைவினைஞர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், கைவினை தொழிலை மேம்படுத்தவும் மத்திய அரசால் பிஎம் விஸ்வகர்மா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, தச்சர்கள், பொற்கொல்லர்கள், முடி வெட்டும் தொழிலாளிகள், கொத்தனார்கள், சலைவைத் தொழிலாளர்கள் மற்றும் பெரும்பாலான ஓபிசி பிரிவினர் இந்த திட்டத்தின் பயன்களை அடைய முடியும்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு திறன் வளர் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக தினசரி ரூ.500 வழங்கப்படும். கருவிப்பெட்டி வாங்க ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
பயிற்சி காலத்திற்கு பின் தொழில் தொடங்க வங்கிகளில் குறைந்த வட்டியில் (5 சதவீதம்) ரூ3 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் 10 நாட்களுக்குள் 1.4 லட்சம் பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.