நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் கூடாரமிட்டு தங்கியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நாளில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு, இருமுடி கட்டி சென்று ஐயப்ப தரிசனம் பெறுவது வழக்கம்.
மகரவிளக்கு பூஜையன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். மேலும் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் மூன்று முறை காட்சியளிப்பார். அதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
நாளை மகரஜோதியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் பாதைகளில் கூடாரமிட்டு தங்கியுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது மகரஜோதியை காண்பதற்காக அவர்கள் தங்கியுள்ளதால் அந்த காட்டு பாதைகள் முழுவதும் கூடாரமாக தென்படுகின்றன.