ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் குறைந்த பட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களிடம் அபராதத் தொகை வசூலித்ததால், மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட வாடிக்கயாளர்களுக்கு, எஸ்.பி.ஐ ஓர் நற்செய்தி வெளியிட உள்ளது
அதன்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வில் சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 70 சதவிகிதம் வரையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநரான பிரவீன் குப்தா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வில் கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயமாக்கியது. அதன்படி, பெரு நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களின் கிளைகளில் 3,000 ரூபாயும், கிராமப்புறங்களின் கிளைகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. இதைப் பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களிடம் ரூ.20 முதல் ரூ.50 வரை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில் இவ்வங்கி ரூ.1,771.67 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் நிலவியதால், மீண்டும் சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகையைக் குறைக்க எஸ்பிஐ வங்கி முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில் அதிகபட்ச இருப்புத் தொகையாக 1,000 ரூபாய் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எஸ்பிஐ வங்கியிடமிருந்து இன்னும் வெளிவரவில்லை.