தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் முதல்வருக்கு ஷூவை அனுப்பியுள்ளார் ஷர்மிளா ரெட்டி.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். சமீபமாக தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளாவுக்கும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஷர்மிளா ரெட்டி மேற்கொண்ட மாநில பாதயாத்திரையில் சந்திரசேகர் ராவ் கட்சியினர் கற்களை வீசி தாக்கியதாலும், கேரவன் வாகனத்திற்கு தீ வைத்ததாலும் ஷர்மிளா ரெட்டியின் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. அதை மீறி பாதயாத்திரைக்கு புறப்பட்ட ஷர்மிளா ரெட்டி காரோடு டோவ் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஷர்மிளா ரெட்டி, முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு சவால் விடுத்துள்ளார். தெலுங்கானாவில் எந்த பிரச்சினையும் இல்லை என கேசிஆர் நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகுவதாகவும், அப்படி முடியாவிட்டால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
மேலும் சந்திரசேகர் ராவுக்கு தனது ஆட்சியில் தைரியமும், நம்பிக்கையும் இருந்தால் தன்னுடன் ஒரு நாள் பாதயாத்திரை வரவேண்டும் என கூறி ஒரு ஜோடி ஷூவையும் அவருக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். பில்லும் ஷூவுடன் அனுப்பியுள்ளதாகவும் அளவு சரியில்லை என்றால் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.