கேரளாவில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட தனது தம்பியை காப்பாற்றிய சிறுமி அதே நோயால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள மாட்டூல் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ரபீக் – மரியம்மை தம்பதி. இவர்களது மகள் அப்ரா. இவருக்கு சிறுவயதிலேயே ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சைக்கு பல கோடி செலவாகும் என்பதால் சிகிச்சை பெற முடியாமல் சிறுமி சக்கர நாற்காலியிலேயே தனது காலத்தை கழித்து வந்தார்.
அங்குள்ள பள்ளி ஒன்றில் சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பியான இரண்டறை வயது முகமதுவுக்கும் தசை சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது. இதை குணப்படுத்த ஒரு டோஸ் தடுப்பூசிக்கு மட்டுமே ரூ.18 கோடி வரை செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால் தனது தம்பியை காப்பாற்ற வேண்டி சிறுமி அப்ரா சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். இதனால் அவரது தம்பியை காப்பாற்ற குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.47 கோடி கிடைத்துள்ளது. இதனால் அப்ராவின் தம்பிக்கு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அப்ராவுக்கு நோடின் பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.