இலங்கையை சேர்ந்தவரும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஒரு பெண்ணிடம் இந்திய வாக்காளர் அடையாள அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண், வங்கி மோசடி விசாரணையின்போது பெங்களூருக்கு பயணம் செய்ய முயன்றபோது மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு முதல் இவர் காவலில் உள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, அவரிடமிருந்து இந்திய வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை , ஆதார் அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் ஆகிய பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்ளூர் காவல்துறை விசாரணையில் லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, செயலில் உள்ள எல்.டி.டி.இ. உறுப்பினர்களுக்கு நிதி பரிமாற்றம் செய்வதில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குற்றவியல் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது. என்.ஐ.ஏ. ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பயங்கரவாத நிதியுதவி தொடர்பாக விசாரணையை எதிர்கொண்டுள்ள ஒரு இலங்கை நாட்டவரால், இந்திய அடையாள ஆவணங்களை எப்படிப் பெற முடிந்தது என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.