புதுச்சேரியில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வலியுறுத்தி நடைபாதை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு ஜனவரி 10 அதாவது நாளை தேர்தல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. இதில் ஏஐடியுசி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சார்ந்த நடைபாதை வியாபாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் பரிசீலனை அனைத்தும் முடிந்து நாளை தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென தேர்தல் நிறுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நடைபாதை வியாபாரிகள் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது