கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த கே.ஜி.போப்பையாவை நியமித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது.
ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பெரும்பான்மை இல்லாத பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்
இதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாளை மாலை 4 மணிக்கு(அதாவது இன்று மாலை 4 மணிக்கு) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனையடுத்து கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே எடியூரப்பாவிற்கு ஆதரவாக செயல்பட்டார் என உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்.
இந்நிலையில் அவரையே தற்காலிக சபாநாயகராக ஆளுநர் நியமித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று காலை 10.30க்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.