கேரளாவில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அம்மாநில அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் அணைகள் திறக்கப்பட்டு கேரளா வெள்ளக்காடாய் மாறியது. தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
வெள்ளத்தின் போது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளது நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்நிலையில், நீர்மட்டத்தை குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம். முல்லை பெரியாறு அணையை திடீரென திறந்து விட்டது வெள்ள பாதிப்பிற்கு ஒரு காரணம் என்று கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3 அடி குறைக்க முல்லைப்பெரியாறு துணை கண்காணிப்புக்குழு உத்தரவிட்டுள்ளது.