மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகுவதாக ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று கேரள பாஜக எம்.பி சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி வெற்றிபெற்றார். தொடர்ந்து நேற்று மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இன்னும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதற்கிடையே கமிட் ஆன படங்களில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பொறுப்பு தனக்கு வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்றும் சுரேஷ் கோபி பேசியது போல வீடியோ வெளியானது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தான் கூறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்றும் சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநில பிரதிநிதியாக மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.