சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ ரீதியாக ஒரு மோதல் ஏற்பட்டது. அப்போது துருக்கி அதிபர் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனால் இந்திய மக்கள் மத்தியில் பெரிய அளவில் கோபம் ஏற்பட்டது. துருக்கியுடன் விமானப் பயணம், வியாபாரம் மற்றும் தூதரக உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் #BoycottTurkey என்ற பிரச்சாரம் வேகமாக பரவியது.
இந்திய வணிகர்கள் சிலர் ஏற்கனவே துருக்கியுடனான வியாபாரத்தை நிறுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில், துருக்கி அதிபர் மீண்டும் பாகிஸ்தானை 'சகோதர நாடு' என்று அழைத்து, நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தார். பாகிஸ்தான் பிரதமர் இதற்காக துருக்கிக்கு நன்றி தெரிவித்தார்.
ராணுவ மோதலின் போது பாகிஸ்தான் பயன்படுத்திய சில ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்ற தகவல் வெளியானதும் இந்தியர்களின் கோபம் மேலும் அதிகரித்தது.
இதனால் துருக்கிக்கு எதிரான மக்களின் மனநிலை தீவிரமடைந்தது. துருக்கியை தவிர்க்கவும், வணிக உறவுகளை நிறுத்தவும் #BoycottTurkey ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. பல அரசியல் தலைவர்களும், வணிக அமைப்புகளும் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர்.
இதனால், வருங்காலத்தில் இந்தியா - துருக்கி வணிகம் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.