குஜராத் மாநிலம் மெஹ்சானாவில், கணவர் குடும்பத்தினரால் கொதிக்கும் எண்ணெயில் கை வைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜப்பூர், கெரிதா கிராமத்தை சேர்ந்த 28 வயது மெஹ்சானா, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவரின் சகோதரி, அப்பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டதால், அடிக்கடி அவரை வசைபாடி துன்புறுத்தி வந்துள்ளார்.
சமீபத்தில், அந்த பெண்ணின் கணவர், அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோர், அப்பெண்ணின் "தூய்மையைச் சோதிப்பதற்காக" ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கையை விடுமாறு அப்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
கொதிக்கும் எண்ணெயில் கை வைக்க மறுத்ததால், அப்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், அவரது கையை வலுக்கட்டாயமாக கொதிக்கும் எண்ணெயில் தள்ளியுள்ளனர். இதனால், அப்பெண்ணின் கைகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.
இந்த சம்பவம் குறித்து அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், அவரது கணவர், அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.