வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து, அதை சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெங்களூரை சேர்ந்த இளம் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் எம். எஸ். ஆர். நகரில் உள்ள சாகர் குரு மற்றும் அவரது மனைவி ஊர்மிளா ஆகிய இருவரும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் தோட்டம் அமைக்க முடிவு செய்து, அவர்கள் பல்வேறு செடிகளை வளர்த்த நிலையில் அவற்றில் கஞ்சா செடியும் வளர்த்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் சாகரின் மனைவி ஊர்மிளா தனது தோட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அதில் கஞ்சா செடி இருந்ததை நெட்டிசன்கள் கண்டுபிடித்து, காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
காவல்துறை உடனடியாக அவர்களின் வீட்டுக்கு சென்றபோது, கஞ்சா செடிகள் அவசர அவசரமாக அகற்றப்பட்டதை கண்டுபிடித்தனர். இதன்பிறகு அவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது, கஞ்சா செடியை வளர்த்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் தங்கள் உபயோகத்திற்காக கஞ்சா செடியை வளர்த்தார்களா அல்லது விற்பனை செய்வதற்காக வளர்த்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.