மதுரையை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் நாசா விண்வெளி மையம் செல்கிறார்.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியை சேர்ந்த ஜாபர் உசேன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயாரின் பெயர் சிக்கந்தர் ஜாபர். இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்ட தான்யா தஷ்னம், ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தீவிர ரசிகர். இந்நிலையில் அவர் www.go4guru.com என்ற இணையத்தளம் மூலம் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற தான்யா தஷ்னம் சர்வதேச விண்வெளி மையமான நாசா செல்லும் வாய்ப்பை பெறுகிறார். இவருடன் அந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஆந்திராவை சேர்ந்த மாணவி சாய்புஜிதா மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் அலிபக் ஆகியோரும் நாசா செல்ல உள்ளனர்.
தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேரும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்லவுள்ளனர். அங்கு நாசாவில் ஒரு வாரம் தங்கி, அங்குள்ள ஆய்வகத்தை சுற்றிபார்க்கும் இவர்கள் அங்குள்ள விஞ்ஞானிகளிடமும் கலந்துரையாட உள்ளனர். இவர்களுக்கான விமான டிக்கெட் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாசா ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் டான் தாமஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தான்யா தஷ்னம், 5 ஆவது வகுப்பு படிக்கும் போதிருந்தே நாசாவுக்கு செல்ல வேண்டும் என கனவு கண்டதாகவும், அந்த கனவு தற்போது 10 ஆவது வகுப்பு படிக்கும் நேரத்தில் கிடைத்துள்ளது எனவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.